Published : 09 Jan 2015 03:49 PM
Last Updated : 09 Jan 2015 03:49 PM

மக்களால் தண்டிக்கப்பட்ட ராஜபக்ச சட்டத்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: ராமதாஸ்

இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ராஜபக்ச மக்களால் தண்டிக்கப்பட்டார். ஆனால், அவர் சட்டத்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கின்றன. ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த சிங்களப் பேரினவாதி ராஜபக்ச மக்கள் சக்தியால் வீழ்த்தப்பட்டிருக்கிறான். பொது வேட்பாளர் மைத்ரிபால சிறீசேனா சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கையின் ஏழாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான ராஜபக்ச இலங்கை மக்களால் தண்டிக்கப்பட்டு பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதைக் காட்டிலும் மன நிறைவளிக்கும் மற்றொரு விஷயம் இத்தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்தது தமிழர்கள் என்பது தான். அதிபர் தேர்தலில் ராஜபக்ச தோற்ற போதிலும் சிங்களர்கள் அதிகம் வாழும் பெரும்பாலான மாவட்டங்களில் ராஜபக்ச தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார். இதனால் ராஜபக்ச பெற்ற முன்னிலையைக் கடந்து மைத்ரி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது வடகிழக்கு மாகாண தமிழர்களின் வாக்குகள் தான் என்பதை மறுக்க முடியாது.

2005 ஆம் ஆண்டு தேர்தலில் மகிந்த வெற்றி பெறுவதற்கு மறைமுக காரணமாக இருந்தவர்கள் தமிழர்கள் தான். அத்தேர்தலை தமிழர்கள் புறக்கணித்ததால் தான் ரணில் விக்கிரமசிங்கேவை 1.80 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இராஜபக்சே அதிபராக முடிந்தது. மகிந்த அதிபராவதற்கு காரணமாக இருந்த தமிழர்களே இப்போது அவரை தண்டித்திருப்பது இனிமையான பழிவாங்கல் தான். இதை உணர்ந்து ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் எச்சரிக்கையுடனும், நன்றியுடனும் மைத்ரிபால சிறிசேனா நடந்து கொள்ள வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் விரும்புகின்றனர்.

அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டு அதிபராக்கப்பட்டுள்ள சிறீசேனாவுக்கு தனிப்பட்ட முறையில் எந்த செல்வாக்கும் இல்லை. அதுமட்டுமின்றி, ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி அடுத்த 100 நாட்களுக்குள் இவர் அதிகாரம் இல்லாத பொம்மை அதிபராகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கே அதிகாரம் கொண்ட பிரதமராகவும் மாறிவிடுவார்கள். அப்படி ஒரு சூழல் ஏற்படும் நிலையில், ரணில், சந்திரிகாவை கொண்ட அதிகாரக் கூட்டணி தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வருமா? என்பது ஐயமே. அதிபர் தேர்தலில் வென்றாலும் வடக்கு மாநிலங்களில் இருந்து படைகளைத் திரும்பப் பெற முடியாது என்று தேர்தலுக்கு முன்பே மைத்ரிபால சிறிசேனா கூறியிருப்பது இந்த ஐயத்தை உறுதிப்படுத்துகிறது.

இத்தகைய சூழலில், தமிழர்களுக்கு நீதியையும், உரிமைகளையும் பெற்றுத்தருவது இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமுதாயத்தின் கடமையாகும். இதைக் கருத்தில் கொண்டு....

1) இலங்கை இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்ச உள்ளிட்டோரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டும்.

2) ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக்குழு இலங்கைக்கு சென்று விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.

3) வடக்கு மாநிலத்திலிருந்து சிங்களப்படைகள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.

4) போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் கண்ணியமாக வாழ வகை செய்யப்பட வேண்டும்.

5) இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தனித்தமிழீழம் அமைப்பது குறித்து உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தமிழர்களின் நலன் சார்ந்த அனைத்து கோரிக்கைகளையும் இலங்கையின் புதிய நிர்வாகம் நிறைவேற்றுவதை சர்வதேச சமுதாயம் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x