Published : 14 Jan 2015 03:34 PM
Last Updated : 14 Jan 2015 03:34 PM

தமிழர்களின் வாழ்வில் அமைதியும், இன்பமும் நிலைக்கட்டும்: ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து

தமிழர்களின் வாழ்வில் நலமும், வளமும் பெருகி, அமைதியும், இன்பமும் நிலைக்கட்டும் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியில், "உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், தமிழர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத்து மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களைப் போற்றிடும் இந்த இனிய பொங்கல் நன்னாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் வண்ணக் கோலமிட்டு, கொத்து மஞ்சள் குலைகள் கட்டி, தித்திக்கும் கரும்பு, காய்கறிகள், பழங்கள் முதலியவற்றை படையலிட்டு, புதுப்பானையில் அரிசியிட்டு, பால் ஊற்றி அது பொங்கி வரும்போது "பொங்கலோ பொங்கல்" என்ற மகிழ்ச்சிக் குரலெழுப்பி இறைவனை வழிபடுவார்கள்.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம், தொழுதுண்டு பின் செல்பவர்" என்ற குறளில் வள்ளுவப் பெருந்தகை, உழவுத் தொழில் செய்து வாழ்கின்றவரே சுய சார்போடு வாழ்கின்ற பெருமையுடையவர்கள் என்னும் பொருள்பட, உழவுத் தொழிலின் மேன்மையினை உலகத்தோர்க்கு உணர்த்தியுள்ளார்.

அத்தகைய சிறப்புமிக்க உழவர் பெருமக்கள் தமது வேளாண் நிலங்களில் சாகுபடி செய்யும் விளைபொருட்களின் உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் இறைவனை வணங்கியும், தம்மோடு சேர்ந்து உழைத்து தம் வருமானத்திற்கு அச்சாரமாகத் திகழ்கின்ற கால்நடைகளுக்கு, தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாள் பொங்கல் திருநாளாகும்.

அனைவருக்கும் மகிழ்ச்சி தருகின்ற அறுவடைத் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில் தமிழர்களின் வாழ்வில் நலமும், வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று மனமார வாழ்த்தி, தமது அன்புக்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x