Published : 01 Jan 2015 10:53 AM
Last Updated : 01 Jan 2015 10:53 AM
தமிழகம் உட்பட நாடு முழுவதும் மத்திய அரசின் நேரடி காஸ் மானிய திட்டம் இன்று(வியாழக்கிழமை) அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். நேரடி காஸ் மானிய திட்டத்தில் இணையாவிட்டாலும் மார்ச் மாதம் வரை தற்போது வழங்கப்பட்டு வரும் மானிய விலையில் சமையல் காஸ் கிடைக்கும் என பொதுத்துறை எண் ணெய் நிறுவனங்கள் தெரிவித் துள்ளன.
தமிழகத்தில் இண்டேன், பாரத், இந்துஸ்தான் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த நுகர் வோர்கள் சுமார் 1.53 கோடி பேர் உள்ளனர். இவற்றில் மத்திய அரசின் நேரடி காஸ் மானிய திட்டத்தின் மூலம் 50 லட்சத்து 85 ஆயிரம் பேர் இணைந்து இருக்கிறார்கள். இந்த 3 நிறுவனங்களை சேர்ந்த நுகர் வோர்கள், திட்டத்தில் இணைவ தற்காக காஸ் ஏஜென்சி மற்றும் வங்கி ஆகியவற்றில் சுமார் 24 லட்சம் பேர் படிவங்கள் கொடுத்து உள்ளனர்.
படிவம் கொடுத்தும் திட்டத்தில் சேர்ந்த தகவல் உறுதி செய்யப்படாமல் உள்ளவர்கள் மற்றும் தற்போது வரை நேரடி காஸ் மானிய திட்டத்தில் இணையாமல் உள்ள நுகர்வோர்கள் என அனைவருக்கும் மார்ச் மாதம் வரை மானிய விலையில் சமையல் காஸ் கிடைக்கும்.
இது குறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கூறும்போது,’’நேரடி காஸ் மானிய திட்டத்தில் தற்போது சேர்ந்துள்ள நுகர்வோர்கள். மற்றும் படிவங்கள் கொடுத்தும் திட்டத்தில் இணைந்ததிற்கான தகவல் கிடைக்காதவர்கள், திட்டத்தில் சேராமல் உள்ளவர்கள் என அனைத்து நுகர்வோர்களுக்கும் மார்ச் மாதம் வரை மானிய விலையில் சமையல் காஸ் வழங்கப்படும்’’ என்றனர்.
மத்திய அரசின் நேரடி காஸ் மானிய திட்டத்தில் எப்போது வேண்டுமென்றாலும் சேரலாம். ஆனால் ஜூன் மாதத்துக்குள் சேரும் நுகர்வோர்களுக்கு மட்டும்தான் அதற்கு முந்தைய மாதங்களுக்கான மானிய தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பெரும்பாலான நுகர் வோர்கள் பயன்படுத்தும் இண்டேன் காஸில் சுமார் 91.72 லட்சம் நுகர்வோர் கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் இண்டேன் பயன்படுத்தும் நுகர்வோர்கள் சுமார் 29 லட்சத்து 98 ஆயிரம் பேர் நேரடி காஸ் மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர். நேரடி காஸ் மானிய திட்டத்தில் படிவம் கொடுத்து காத்திருப்போர் சுமார்16 லட்சம் பேர் உள்ளனர்.இண்டேன் நிறுவனத்தில் சுமார் 45 லட்சம் பேர் நேரடி காஸ் மானிய திட்டத்தில் இணையாமல் உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மாநகரங்களில் சென்னையில்தான் 17 லட்சம் இண்டேன் நுகர்வோர்கள் உள்ளனர். ஆனால் நேரடி காஸ் மானியத் திட்டத்தில் சுமார் 3 லட்சத்து 13 ஆயிரம் பேர் மட்டும் இணைந்து இருக்கிறார்கள்.
ஐஒசி நிறுவனம் கடந்த சில நாட்களாக நேரடி காஸ் மானிய திட்டத்துக்கான சிறப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. தற்போது இந்த சிறப்பு முகாம்களில் இந்துஸ்தான் மற்றும் பாரத் ஆகிய சமையல் காஸ் நிறுவனங்களும் கலந்து கொண்டு வருகின்றன.
இது குறித்து ஐஒசி அதிகாரி ஒருவர் கூறும்போது,’’தமிழகத்தில் மத்திய அரசின் நேரடி காஸ் மானிய திட்டத்தில் நுகர்வோர்கள் இணைந்து வருகிறார்கள். அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை சேர்த்து மாநிலம் முழுவதும் ஒரு மாதத்துக்கு சுமார் 1.5% பேர் இத்திட்டத்தில் இணைந்து வருகிறார்கள். இதனை மேலும் விரைவுபடுத்த பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அடுத்த 3 மாதத்துக்குள் தற்போது உள்ள எண்ணிக்கையை விட பெரும்பாலான நுகர்வோர்கள் நேரடி காஸ் மானிய திட்டத்தில் இணைக்கப்படுவார்கள்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT