Published : 03 Feb 2014 12:00 AM
Last Updated : 03 Feb 2014 12:00 AM
ஸ்பெக்ட்ரம் கணக்கைச் சொல்லி வெற்றிக்கு வேட்டு வைப்பார்கள் என்பதால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டார் என பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், நீலகிரி தொகுதியில் போட்டியிட கட்சியில் விருப்ப மனு அளித்திருக்கிறார் ஆ.ராசா.
பொதுத் தொகுதியாக இருந்த நீலகிரி கடந்த தேர்தலில் தனி தொகுதி வட்டத்துக்குள் வந்தது. ஸ்பெக்ட்ரம் சர்ச்சை இருந்தபோதும் இங்கே போட்டியிட்டு வெற்றிபெற்றார் ஆ.ராசா. தொகுதிக்கான திட்டங்கள் சிலவற்றை செயல்படுத்தி இருந்தாலும் இந்தமுறை ராசா போட்டியிடமாட்டார். அப்படியே போட்டியிட்டாலும் சிதம்பரம் தொகுதிக்கு போய்விடுவார் என்றெல்லாம் செய்திகள் கிளம்பிய நிலையில், மீண்டும் நீலகிரியிலேயே அவரை களமிறக்குகிறது திமுக.
இம்முறை ராசாவிடமிருந்து தொகுதியைக் கைப்பற்றுவதற்கு அதிமுக-வும் அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. ராசாவுக்கு போட்டியாக கட்சியின் அண்மைக்கால வரவான பரிதி இளம்வழுதி களத்தில் இறக்கப்படலாம் எனச் செய்தி வருகிறது.
ஏற்கெனவே நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த கே.ஆர்.அர்ஜுனனை நீக்கிவிட்டு பாலநந்தகுமாரை அந்தப் பதவியில் அமர்த்தினார் ஜெயலலிதா. அண்மையில் அவரும் மாற்றப்பட்டு, பரலியாறு ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். “தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்
சேர்ந்த கலைச் செல்வனை நாடாளு மன்றத் தேர்தலில் நிறுத்துவதற்காகவே அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்திருக்கிறார் அம்மா’’ என்று
சொல்லும் நீலகிரி அதிமுக-வினர்,
“தொகுதியில் உள்ள படுகர் இன மக்களின் அபிமானத்தை பெறு வதற்காக விரைவில் அந்த வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கு கட்சியில் முக்கியப் பதவி கொடுக்கப்படலாம்’’ என்றும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT