Published : 26 Apr 2014 10:32 AM
Last Updated : 26 Apr 2014 10:32 AM
தமிழகத்தில் கட்டுமானத் தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுக மாகவும் சுமார் 30 லட்சம் பேர் உள்ளனர். கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக கட்டுமானத் தொழில் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி இருக்கிறது. முக்கிய மூலப் பொருட் களான மணல், சிமென்ட், கம்பி விலைகள் ஏறுமுகமாகவே இருப்ப தால், கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. இத்தொழிலை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள தாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து இந்திய கட்டுமானத் தொழில் மேம்பாட்டுக்கான சங்கங் களின் கூட்டமைப்பு (credai) தலைவர் என்.நந்தகுமார், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கட்டுமானத் தொழிலை 247 தொழில்கள் சார்ந்துள்ளன. சிமென்ட், கம்பி போன்ற முக்கிய பொருட்கள் தயாரிப்போர், கொத்தனார், பிளம்பர், எலக்ட்ரீஷியன், கார்பெண்டர், பெயின்டர், வன்பொருள் விற்பனை உள்பட ஏராளமானோர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு ரூ.15-க்கு விற்கப்பட்ட ஒரு கனஅடி மணல், இப்போது ரூ.50-க்கு விற்கப்படுகிறது. சிமென்ட் விலை மூட்டைக்கு ரூ.30 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் கட்டுமானத் தொழில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால், கம்பிகளுக்கான தேவை குறைந்துவிட்டது. கோடிக் கணக்கில் வர்த்தகம் நடக்கும் கட்டுமானத் தொழிலில் ஏற்பட்டுள்ள சரிவு, ஆயிரக்கணக்கான தொழிலாளர் களின் வேலை இழப்புக்கு காரணமாகி யுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழக கட்டுமான வேலைக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வந்திருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர்.
இவ்வாறு நந்தகுமார் கூறினார்.
லோடிங் கான்ட்ராக்ட் வேண்டாம்
சென்னை கட்டுமானப் பொறியாளர் கள் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம் கூறியதாவது:
மணல் விற்பனையில் ‘லோடிங் கான்ட்ராக்ட்’ முறையை கைவிட்டால் தான் விலை குறையும். ஆற்றில் இருந்து மணல் அள்ளி ‘யார்டில்’ குவித்து அங்கேயே ஒரு யூனிட் மணல் ரூ.325-க்கு விற்க வேண்டும். ‘லோடிங் கான்ட்ராக்ட்’ முறை இருப்பதால் ஒரு யூனிட் மணல் ரூ.2,500-க்கு விற்கப்படுகிறது.
வருவாய்த் துறைக்கு அடுத்தபடி யாக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறையாக கட்டுமானத் தொழில் உள்ளது. அப்படியிருந்தும் இத்துறை மீது அரசு பாராமுகமாக இருப்பது வேதனை அளிக்கிறது. இதன் காரணமாக ஏராளமானோர் தங்களது எதிர்ப்பை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஓட்டு மூலம் தெரிவித்துள்ளனர்.
கட்டுமானத் தொழில் உச்சக்கட்டத் தில் இருந்தபோது குடியிருப்புகளில் இருப்பவர்கள் கார்பெண்டர், பிளம்பர், எலக்ட்ரீஷியன் போன்றவர்களை வேலைக்கு அழைத்தால் ஒருவாரம் முதல் 10 நாட்கள் கழித்துதான் வருவார்கள். இப்போது அழைப்பு விடுத்தால் அடுத்த சில மணி நேரத் திலே வந்து வேலையை முடித்துக் கொடுக்கிறார்கள். கட்டுமானத் தொழில்பாதிப்பால் அவர்கள் வேலையில்லாமல் இருப்பதே இதற்கு காரணம். தேர்தல் முடிந் துள்ள நிலையில் கட்டுமானத் தொழிலை சரிவில் இருந்து காப்பாற்றி, லட்சக் கணக்கானோரின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு வெங்கடாசலம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT