Last Updated : 18 Jan, 2015 02:29 PM

 

Published : 18 Jan 2015 02:29 PM
Last Updated : 18 Jan 2015 02:29 PM

முரண்பாடுகளின் மொத்த உருவம்... டாஸ்மாக் சாம்ராஜ்யம்!

1600 மடங்கு வருவாய்.. ஆனால் நஷ்டம் | போட்டியை தடுப்பதால் அதிக விலை | ஆணையரின் இரட்டை நிலை

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக் கத் தொடங்கியிருக்கிறது. மதுப்பழக்கத்தின் பாதிப்புகள், தீமைகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. உணவு மானியம், இலவசத் திட்டங்களுக்கு தேவையான நிதியைத் திரட்டவே மது விற்பனையை அரசு ஊக்குவிக்கிறது என்ற கருத்து ஒரு பக்கம் இருந்தாலும், மது தயாரிப்பு, விநியோகம், விற்பனை போன்றவற்றின் பல அம்சங்கள் வெளியுலகப் பார்வைக்குத் தெரியாமல் மர்மமாகவே இருக்கிறது.

இந்தத்துறை எப்படி வளர்ந்து வருகிறது, இதில் உள்ள கட்டுப்பாடு முகமைகளும் விதிகளும் எப்படிச் செயல்படுகின்றன என்பதை ஆராய்வதன் மூலம் இந்த மர்மத்தை ஓரளவு அறிந்துகொள்ள முடியும்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருந்தாலும் மதுபான விற்பனையும் வரி வருவாயும் ஆண்டுக்காண்டு கூடிக்கொண்டே வருகிறது. முதல் அட்டவணையில், மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் ஒட்டுமொத்த வரி வருவாய் (கட்டம் 5), மாநிலப் பொருளாதார வளர்ச்சியைவிட (கட்டம் 7) எல்லா காலகட்டத்திலும் அதிகமாகவே இருப்பதை காணமுடிகிறது. மதுபான வரியின் சிறப்பம்சம் இதுவே.

பூரண மதுவிலக்கு அல்ல

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கும் இல்லை, பூரண மது விற்பனையும் இல்லை!

கள், சாராயம் போன்றவற்றுக்கு அனுமதி மறுத்துவிட்டு, இந்தியாவில் தயாராகும் அந்நிய மதுபான வகைகளான பீர், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின் (ஐ.எம்.எஃப்.எஸ்.) ஆகியவற்றை மட்டுமே வரம்பின்றி அனுமதிக்கும் கொள்கை கடைபிடிக்கப்படுகிறது. இவை மட்டுமே தமிழகத்தில் தயாரிக்கப்படவும் விற்கப்படவும் அருந்தப்படவும் அனுமதிக்கப்படுகிறது.

‘மக்கள் குடிப்பதை ஊக்குவிக்கக்கூடாது’ என்பதற்காகவே மதுபானங்கள் மீது அதிக வரி விதிக்கப்படுவதாக மாநில அரசு கூறுகிறது. ஆனால் ஆண்டுதோறும் மதுபானம் மூலம் வருவாய் பெருகுவதைப் பார்க்கும்போது, இது ‘குடிப்பதைத் தடுப்பதற்கான’ வரி இல்லை என்று புரிகிறது.

அட்டவணை 2-ல், இந்தியாவில் தயாராகும் அந்நிய மதுபான உற்பத்தி அளவு அதிகரித்திருப்பதையும், மக்கள் தொகையில் 18 வயதைத் தாண்டிய ஆடவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விஷயம் புரிந்துவிடும்.

ஆடவர்கள்தான் குடிப்பவர்கள்

18 வயதுக்குக் குறைவான சிறுவர்களும் பெண்களும் மதுபானம் குடிப்பதில்லை என்பதே சமுதாய நிலை. எனவே 18 வயதைத் தாண்டிய ஆடவர்களின் எண்ணிக்கையையும் மதுபான விற்பனை அளவையும் ஒப்பிடும்போது ஆடவர் எண்ணிக்கையில் ஏற்படும் வளர்ச்சியைவிட மதுபான விற்பனை வளர்ச்சி அதிகமாகவே இருப்பது தெரிகிறது. மதுபானங்களின் தயாரிப்புச் செலவு கூடியபோதிலும், வரி உயர்த்தப்பட்ட போதிலும், விற்பனையும் உயர்ந்துகொண்டே வருகிறது. அதாவது நபர்வாரிமது நுகர்வு அதிகரிக்கும் விதத்தில் கடைகளின் எண்ணிக்கையும் பாட்டில்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுக்கொண்டே வருகிறது.

டாஸ்மாக்

தமிழ்நாட்டில் தயாராகும் அந்நியரக மதுபானங்களை விற்பதற்கென்றே அரசு உருவாக்கிய ‘சந்தைப்படுத்தும் விநியோக அமைப்பு’தான் ‘டாஸ்மாக்’. இதன் மூலம் மட்டுமே மக்களுக்கு மதுபான விற்பனை நடப்பதால் அரசு தனக்கு தேவைப்படும் வரி வருவாயை செலவு அதிகமின்றிப் பெற முடிகிறது.

3-வது அட்டவணை, சமீபத்திய 2 ஆண்டுகளில் டாஸ்மாக்கின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. வெறும் 1,500 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட டாஸ்மாக் 2011-12-ல் ரூ.21,96,602.40 லட்சம், 2012-13-ல் ரூ.25,31,366.86 லட்சம் என வருவாய் ஈட்டியது. இது சராசரியாக அதன் முதலீட்டைப் போல 1,600 மடங்கு!

இந்த அளவுக்கு விற்றுமுதல் இருந்தும், மதுபான விற்பனையில் ஏகபோக நிறுவனமாக பத்தாண்டுகளாகத் திகழ்ந்தும் டாஸ்மாக் இப்போது நஷ்டத்தில் நடக்கிறது! 2012-13-ல் அதன் நிகர நஷ்டம் ரூ.9,936.16 லட்சம். அதற்கு முந்தைய ஆண்டு (2011-12) அதன் நிகர நஷ்டம் ரூ.147 லட்சம். அதன் வருவாய், செலவு இனங்களில் காணப்படும் தொகைகளைக் கூர்மையாக ஆராய்ந்தால் இது புலப்படும்.

3-வது அட்டவணைப்படி 2012-13ல் டாஸ்மாக்கின் வருவாயில் 96.3% செயல்பாட்டு வருவாயாகும். அது மதுபான விற்பனையிலிருந்து கிடைத்த வருவாயாகும். மதுபானங்களை வாங் கிய விதத்தில் அதற்கு ஏற்பட்ட செலவு 62.3% தான். ஊழியர்களுக்கு ஊதியம், வரி போன்றவை இதர செலவுகள்.

அரசுக்கு டாஸ்மாக் செலுத்திய மொத்த கட்டணம், விற்பனை வரித்தொகை ரூ.11,27,670.80 லட்சமாகும். இது டாஸ்மாக் செய்த மதுபானக் கொள்முதலில் 82.4%, மொத்த செலவில் 44.4% ஆகும். 2012-13-ல் டாஸ்மாக் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ.19,510.99 லட்சத்தைக் கொடுத்தது. 2012-13-ல் அது 27,270 பேரை வேலைக்கு அமர்த்தியது. அவர்களில் 26,913 பேர் தாற்காலிக ஊழியர்கள். எஞ்சியவர்கள் நிரந்தர ஊழியர்கள். சராசரியாக ஒவ்வொரு ஊழியருக்கும் மாதந்தோறும் ரூ.6,000 ஊதியம் வழங்கப்பட்டது.

டாஸ்மாக்கில் அரசு இட்ட முதலுக்கும் அது கையாண்ட விற்றுமுதலுக்குமான விகிதாச்சாரம் பல மடங்காக சாதனை படைத்திருக்கிறது. வரி வருவாயைச் சிறிதும் வெளியே கசியவிடாமல் அரசுக்கே கிடைக்குமாறு செய்திருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிக வரி வருவாய் டாஸ்மாக் மூலமா?

மாநிலத்துக்குக் கிடைக்கும் வரி வருவாயில் கணிசமான பகுதி டாஸ்மாக் மூலம்தான் கிடைக்கிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. 2011-12-ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைப்படி, “அரசின் மொத்த ஆயத்தீர்வை வரி வருவாயில் 98% டாஸ்மாக் மூலமே பெறப்படுகிறது”. ஆயத்தீர்வையை எக்சைஸ் என்றும் கலால் வரி என்றும் கூட அழைப்பார்கள்.

டாஸ்மாக்கின் வருடாந்திர நிதியறிக்கையில் அது திரட்டும் ஆயத்தீர்வை குறித்த விவரங்கள் இல்லை. அதன் கொள்முதல் விலையிலேயே அதுவும் இதர கட்டணங்களும் சேர்ந்திருக்க வேண்டும்.

எல்லா சர்க்கரை ஆலைகளிலும் சாராய வடிப்பாலைகளிலும் மதுபான தயாரிப்புப் பிரிவுகளிலும் கையாளப்படும் கரும்புப் பாகுக் கழிவு, மற்றும் ஐ.எம்.எஃப்.எஸ். போன்றவை தொடர்பான புள்ளிவிவரங்களைக் கணக்கிடவும் சரிபார்க்கவும் மாநில அரசு வலுவான நிர்வாக அமைப்பை வைத்திருக்கிறது.

மதுபானம் மீதான ஆயத் தீர்வை

2012-13-ல் ரூ.13,68,140.42 லட்சம் மதிப்பிலான சரக்குகளை டாஸ்மாக் வாங்கியதை ஏற்கெனவே பார்த்தோம். மதுபான உற்பத்தியாளர்கள், உற்பத்தியின்போது செலுத்திய ஆயத்தீர்வையும் இதில் சேரும். மதுபானம் மீதான ஆயத்தீர்வை என்பது குறிப்பான வரி. மதுபானத்தின் ஒரு அலகுக்கு இவ்வளவு ரூபாய் என்று விதிக்கப்படுகிறது. டாஸ்மாக் கொள்முதல் செய்த மொத்த மதுபானம் மீதான ஆயத்தீர்வை எவ்வளவு என்று தனியாக நம்மால் கணக்கிட முடியாது. எனவே சரியான அளவுக்கு நெருக்கமாக வரும் வகையில் கணக்கிட்டிருக்கிறோம்.

வழக்கமாக மதுவிலக்கு-ஆயத்தீர்வை துறை ஆயத்தீர்வை வசூல் விவரங்களை வெளியிடும். 2010-11 வரையிலான காலத்துக்கு நம்மிடம் தகவல்கள் உள்ளன. எனவே அந்த ஆண்டை குறிப்பீடான ஆண்டாகக் கருதிக்கொள்ளலாம்.

2010-11ல் டாஸ்மாக்கின் மொத்தக் கொள்முதல் தொகை – ரூ.7,82,946.59 லட்சம். அந்த ஆண்டு வசூலான மொத்த ஆயத்தீர்வை ரூ.3,44,215 லட்சம். மதுபானத்துக்கான தொகையை இதில் கழித்தால், மதுபானத்தின் மொத்த மதிப்பில் 78% அளவுக்கு ஆயத்தீர்வை வசூலிக்கப்படுவது புலனாகிறது. 2012-13-ல் டாஸ்மாக் வாங்கிய மொத்த மதுபானத்தின் மதிப்பு 12,35,342.44 லட்சமாகும். அதில் 78% ஆயத்தீர்வை என்று கணக்கிட்டால், கொள்முதல் செய்யப்பட்ட மதுபானத்தின் நிகர மதிப்பு ரூ.6,94,012.61 லட்சமாகும். இதிலும் வெவ்வேறு கட்டணங்களும் தீர்வைகளும் அடக்கம். இது தனித்தனியாக எவ்வளவு என்பது தெரியாத நிலையில் இதையே மதுபானத்தின் விலை மதிப்பாகக் கருதுகிறோம்.

4-வது அட்டவணையில், டாஸ்மாக் செலுத்திய விற்பனை வரியையும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை 2014-15 ஆண்டுக்கென வெளியிட்ட அறிக்கையிலிருந்து பெறப்பட்ட விற்பனை வரி வருவாயையும் ஒப்பிட்டுள்ளோம்.

மாநில அரசு மதுபானம் மீது திரட்டிய மொத்த விற்பனை வரி மதிப்பில் 50%-க்கும் குறைவாகத்தான் டாஸ்மாக் செலுத்தியிருக்கிறது. டாஸ்மாக் தான் மதுபான விற்பனையில் பெரிய அமைப்பு என்றாலும், அதுவல்லாமல் வேறு வழிகளிலும் மதுபான விற்பனை மூலம் விற்பனை வரி கிடைக்கிறது என்று தெரிகிறது.

முதல் நிலையில் மதுபான விற்பனை மீது 58% வரி வருவாயும் 2-வது நிலையில் 38% வருவாயும் கிடைக்கிறது. மூன்றாவது நிலையில் விற்பனை வரி 14.5%. இறக்குமதியாகும் அந்நிய மதுபானங்கள் மீது முதல் நிலையில் 58%-ம் இரண்டாவது நிலையில் 14.5%-ம் விற்பனை வரி விதிக்கப்படுகிறது. தனிநபர் அல்லாமல் சங்கங்களுக்குச் சொந்தமான கிளப்புகளும் நட்சத்திர ஹோட்டல்களும் மதுபானங்களை விற்கின்றன. அவை மதுபானங்களை வாங்கி – விற்பதற்கான கட்டணங்களையும் விற்பனை வரியையும் அரசுக்குச் செலுத்துகின்றன.

2011 வரையில் 872 அமைப்புகள் அவ்வித உரிமங்களைப் பெற்றுள்ளன. விண்ணப்பக்கட்டணம், உரிமக் கட்டணம், முன்னுரிமைக் கட்டணம், காப்புக்கட்டணம் என்று மொத்தம் ரூ.2,341.13 லட்சம் அவற்றிடம் பெறப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் செலுத்திய விற்பனை வரி பற்றிய தரவுகள் நமக்குக் கிடைக்கவில்லை. டாஸ்மாக் நிறுவனம் மதுபான விற்பனை மூலமான விற்பனை வரியில் 46% மட்டுமே செலுத்தியுள்ளது. இந்த 872 அமைப்புகள் எஞ்சிய 56%-ஐச் செலுத்தியுள்ளன. பொருத்தமற்றதுபோலத் தோன்றும் இந்தத் தரவுகள் குறித்த விவரங்களை நம்மால் திரட்ட இயலவில்லை.

மதுபான தயாரிப்புக்கு ஆகும் செலவு எவ்வளவு என்ற தகவல் துல்லியமாகக் கிடைக்காதவரை ஆயத் தீர்வை, விற்பனை வரி எவ்வளவு என்றும் துல்லியமாகக் கணக்கிடுவது இயலாது. விற்பனை வரி என்பது மதுபானத்தின் ரூபாய் மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படுவது. ஆயத்தீர்வை என்பது அளவின் அடிப்படையில் விதிக்கப்படுவது. இதனால் வெவ்வேறு விகிதங்களில் உற்பத்தி வரி வசூலிக்கப்படுகிறது. விற்பனைக் கட்டணம், சிறப்புக் கட்டணம், சிறப்பு உரிமைக் கட்டணம் ஆகியவையும் ஒரு அலகு மதுபானத்துக்கு எவ்வளவு என்று தான் கணக்கிடப்படுகிறது. விற்பனை வரிக்குக் கணக்கிடுவதைப் போல ஆயத் தீர்வைக்கும் மதிப்பின் அடிப்படையில் வரி கணக்கிடப்பட்டால் மதுபான உற்பத்திச் செலவு அடிப்படையில் அரசுக்கு அதிக வரி வருவாயும் கிடைக்கும், வரி நிர்வாகமும் வெளிப்படையாகவும் எளிமையாகவும் இருக்கும்.

மதுபான வகைகளையும் பொது விற்பனை, சேவை வரிச் சட்டத்தின் (ஜி.எஸ்.டி.) கீழ் கொண்டுவந்துவிட வேண்டும் என்று மதுபான உற்பத்தியாளர்கள் மத்திய அரசைக் கோரி வருகின்றனர். அப்படி வந்தால் ஆயத் தீர்வையும் விற்பனை வரியும் ஒன்றாக இணைக்கப்பட்டுவிடும். ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு மதுபானம் அனுப்பப்படும் போது வரியே இல்லாமல் போய்விடும். அதே வேளையில் எந்த மாநிலத்தில் மது அருந்தப்படுகிறதோ அங்கு வரி வசூலிக்கப்படும். பொது ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டால் மதுபானம் மூலம் கிடைக்கும் வரி வருவாய் குறைந்து விடுமே என்று மாநில அரசுகள் கவலைப்படுகின்றன.

மாநிலத்தின் மொத்த ஆயத்தீர்வையில் 78%-ம், விற்பனை வரியில் 60%-ம் மதுபானம் மூலம்தான் பெறப்படுகிறது என்றால் தோராயமாக மதுபானம் மீது 200% வரி விதிக்கப்படுகிறது என்று புரிகிறது.

உற்பத்தி, விநியோக அமைப்பு

மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறையின் முக்கிய பணியே 1937-ல் இயற்றப்பட்ட தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்துவதுதான். அதாவது மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு ஏதுவாக கரும்புப் பாகுக்கழிவு, எரிசாராயம், மதுபானம் ஆகியவற்றைத் தயாரிக்கவும் விநியோகிக்கவும் உரிமங்கள் வழங்குவது, சட்டப்படி ஆயத்தீர்வையையும் வேறு கட்டணங்களையும் வசூலிப்பது இதன் வேலை.

ஆயத்துறை தொடர்பான தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் 2011-12-க்கான அறிக்கை (அட்டவணை-5) ஆறு பெரிய நிறுவனங்களிடமிருந்து மதுபானம் கேட்டு வாங்கப்பட்ட தகவல்களைத் தருகிறது.

டாஸ்மாக் இவற்றிடம் வாங்கிய அளவுகளில் நிறைய வித்தியாசம் காணப்படுகிறது. வெவ்வேறு ரக மதுபானங்களுக்கு இவ்வளவுதான் விலை என்று டாஸ்மாக் ஏகபோகமாக நிர்ணயித்த பிறகு, இன்னின்ன நிறுவனம் இவ்வளவு தர வேண்டும் என்று தன்னிச்சையாக உத்தரவிட்டிருக்கிறது. இப்போதுள்ள நடைமுறையானது குறைந்த விலையில் வெவ்வேறு ரக மதுபானங்களைத் தயாரிப்பதை ஊக்குவிப்பதாக இல்லை என்பது வெளிப்படை. மதுபான உற்பத்தியாளர்களிடையே நியாயமான போட்டி காரணமாக உற்பத்தி விலை குறைந்தால், விற்பனை விலையை நிர்ணயிக்கும் இடத்தில் அரசு நிறுவனமான டாஸ்மாக் இருப்பதால் அந்தப் பலன் முழுக்க அரசுக்குத்தான் கிடைக்கும், அதன் மூலம் வருவாயும் உயரும். மதுபான விற்பனையைக் கண்காணிக்கவும் பெருகாமல் கட்டுப்படுத்தவும் வேண்டிய மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை, டாஸ்மாக் மூலம் மது விற்பனையைத் தூண்டி, பெருக்கி அரசுக்கு ஆயத்தீர்வை, விற்பனை வரிகள் மூலம் வருவாயைப் பெருக்கும் வேலையைச் செய்கிறது.

மதுவிலக்கு, ஆயத்துறை ஆணையர் மது விற்பனையைக் கட்டுப்படுத்தும் வேலையையும் மது வருவாயைப் பெருக்கும் வேலையையும் ஒரே நேரத்தில் செய்கிறார். இரட்டை வேலையை ஒருவரே செய்வதற்குப் பதில் இந்தப் பணியை இருவேறு அமைப்புகள் செய்வதே பொருத்தமாக இருக்கும். மது விற்பனையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு சட்ட அதிகாரம் பெற்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

© பிரன்ட்லைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x