Published : 25 Jan 2015 10:04 AM
Last Updated : 25 Jan 2015 10:04 AM

ரயில்வே மண்டல, கோட்ட தலைமை அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை 27 முதல் அமல்

ரயில்வே துறையில் உள்ள மண்டல மற்றும் கோட்ட தலைமை அலுவலகங்களில் வரும் 27-ம் தேதி முதல், ஊழியர்களின் வருகை பதிவேட்டை கண்காணிக்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படவுள்ளது.

ரயில்வே துறையில் சுமார் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களின் வருகை பதிவுகளை கணினி மூலம் கண்காணிக்கும் வகையில் பயோமெட்ரிக் முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டது. இதன்மூலம் ஒட்டுமொத்த ரயில்வே ஊழியர்களின் வருகை பதிவையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க முடியும். அதன்படி, ரயில்வே வாரியத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அடுத்த கட்டமாக இந்தியன் ரயில்வேயில் நாடுமுழுவதும் உள்ள 17 மண்டலங்கள் மற்றும் 60 தலைமை அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை வரும் 26-ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. அன்றைய தினம் விடுமுறை என்பதால் வரும் 27-ம் தேதி முதல் இது முழுமையாக நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றதாக கூறி அலுவலர்கள் பணி நேரத்தில் வெளியே சுற்றமுடியாது. மேலும், குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு ஊழியர்கள் பணியில் உள்ளனர் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியும்.

இது தொடர்பாக டிஆர்இயு (தட்சன் ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்) செயல் தலைவர் ஆர்.இளங்கோவனிடம் கேட்ட போது, ‘‘இந்திய ரயில்வே துறையில் மொத்தம் 2.90 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. தெற்கு ரயில்வேயில் மட்டுமே பல்வேறு பிரிவுகளில் 15,590 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் நிரப்புவதை விட்டுவிட்டு பயோமெட்ரிக் முறையை அமல்படுத்தவுள்ளனர். பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவதை தனியார் மயமாக்கும் திட்டத்தின் தொடக்கமாகவே நாங்கள் பார்க்கிறோம்’’ என்றார்.

இதுபற்றி தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பயோமெட்ரிக் முறையை அமல்படுத்தும் திட்டம் உள்ளது. இதற்கான முழுப்பணிகளும் நடந்து வருகின்றன. ஆனால், அதை எப்போது நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக இதுவரையில் உயரதிகாரிகளிடம் இருந்து எங்களுக்கு அறிவிப்பு வரவில்லை. அறிவிப்பு வந்தவுடன் இது நடைமுறைப்படுத்தப்படும். நிர்வாக பணிகளை வேகமாக செய்ய பயோமெட்ரிக் முறை பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x