Published : 14 Jan 2015 11:51 AM
Last Updated : 14 Jan 2015 11:51 AM

பெருமாள்முருகன் சர்ச்சையில் திராவிட கட்சிகள் மவுனத்தின் பின்னணி என்ன?

**** பெருமாள்முருகன் மன்னிப்பு கேட்காமல் இருப்பதற்கும்கூட ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டதா என்பதை அந்த எழுத்தாளரே முன்வந்து பூட்டிய அறைக்குள் நடந்தது என்னவென்பதை தெரிவித்தால் மட்டுமே வெளியாகும். *****



எழுத்தாளர் பெருமாள்முருகன் மீது திணிக்கப்பட்டுள்ள சமூக புறக்கணிப்பை மேலும் உறுதி செய்வதாகவே இருக்கிறது 'மாதொருபாகன்' பிரச்சினையில், திராவிட கட்சிகள் மவுனம் சாதிப்பது.

தமிழ் இலக்கியப் பணியில் இருந்து முற்றிலும் விலகுவதாகவும், இனி ஆசிரியர் பணியை மட்டும் தொடரவுள்ளதாகவும் எழுத்தாளர் பெருமாள்முருகன் அறிவித்துள்ளார். அவரது உணர்ச்சிமிகு இந்த அறிவிப்புக்குப் பின்னரும்கூட அரசியல் கட்சிகள், குறிப்பாக திராவிட கட்சிகள் தங்களது மவுனத்தை கலைத்தபாடில்லை.

முக்கியப் பிரச்சினைகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டி அறிக்கைகளை அவிழ்த்துவிடும் திமுக தலைவரும், இலக்கியவாதியுமான கருணாநிதிகூட ஒட்டுமொத்த ஊடக உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள பெருமாள்முருகன் பிரச்சினையில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காதது ஏனோ?

ஆளும் அதிமுகவும் இந்த விஷயத்தைப் பொருத்தவரை பாரபட்சமில்லாமல் மவுனம் காத்துவருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டு நிரூபணமான பின்னர் ஜெயலலிதா எந்த விவகாரத்திலுமே தலையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சிகள் நிலை இப்படியென்றால், நாமக்கல் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் இப்பிரச்சினையை அணுகியுள்ள விதமும் அதிகாரிகள் வட்டாரத்தில் சாதிய பிரச்சினைகளைப் பொருத்தவரை எந்த மாதிரியான மனநிலை நிலவுகிறது என்பதை தெளிவாக எடுத்துரைப்பதாக இருக்கிறது.

நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் எழுத்தாளர் பெருமாள்முருகன், இந்துத்துவா அமைப்புகள் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர். 4 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. முடிவில், பெருமாள்முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதோடு, விற்பனையாகாத 'மாதொருபாகன்' நூல்களை திரும்பப்பெறுவதாகவும் அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் அப்படி என்னதான் பேசப்பட்டது. பெருமாள்முருகன் மன்னிப்பு கேட்காமல் இருப்பதற்கும்கூட ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டதா என்பதை அந்த எழுத்தாளரே முன்வந்து பூட்டிய அறைக்குள் நடந்தது என்னவென்பதை தெரிவித்தால் மட்டுமே வெளியாகும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் கூறும்போது, "தமிழகத்தில் மதம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டு உடனடியாக குரல் கொடுக்கும். அதுவே மதமும், சாதியும் கலந்த ஒரு பிரச்சினை என்றால் அரசியல் கட்சியினர் மவுனிகள் ஆகிவிடுவது வழக்கம்தானே" என்றார். இந்துத்துவா அமைப்புகளைக் காட்டிலும், மாநிலத்தின் மேற்குப் பகுதியில் வாக்கு வங்கியில் முக்கியப் பங்கு வகிக்கும் கொங்கு வெள்ளாளர் பிரிவைச் சேர்ந்த மக்களே பெருமாள்முருகனுக்கு எதிராக போர்க்கொடியை அதி தீவிரமாக உயர்த்தியுள்ளனர் என்பது கவனிக்கப்பட வேண்டியது. சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் சி.லட்சுமணன். இவருக்கு சொந்த ஊர் திருச்செங்கோடு. பெருமாள் முருகன் சந்திக்கும் பிரச்சினையில் நம் கண்களுக்குமுன் தெரிந்தவை கொஞ்சமே என்கிறார் இவர்.

அவர் மேலும் கூறும்போது, "பெருமாள் முருகன், நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் கல்வி பிரச்சினை, தொழில்துறையில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின் ஆதிக்கம், சாதி பாகுபாடுகள் போன்றவற்றை தன் படைப்புகளில் தொடர்ந்து பிரதிபலித்திருக்கிறார். தருமபுரி சம்பவத்தைத் தொடர்ந்து தான் எழுதிய ஒரு புத்தகத்தை இளவரசனுக்கு சமர்ப்பித்திருக்கிறார். சூழலுக்கு ஏற்ப அவர், இப்போது தேர்ந்தெடுத்திருக்கும் வழி திருச்செங்கோடு பகுதிகளில் அமைதியை நிலைநாட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இத்தனைப் பிரச்சினைக்கு மத்தியிலும் திராவிட கட்சிகள் மவுனம் காப்பது கண்டனத்துக்குரியது. பல்வேறு சமூக சீர்திருத்த புரட்சிகளுக்கு பெயர் போன மாவட்டத்தில் கருத்துரிமைக்கு நேர்ந்துள்ள இந்த சிக்கலை சட்டை செய்து கொள்ளாமல் இருப்பது ஆபத்தானது. இதனால், சாதிய சக்திகள் பலமடையும். பெருமாள்முருகனுக்கு எதிராக கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.

இவ்விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார். "ஒருவர் சொல்லும் கருத்து உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அவர் கருத்தே கூற முடியாது என தடுத்து நிறுத்த முடியாது. காங்கிரஸ் கருத்துரிமைக்காக எப்போதுமே குரல் கொடுக்கும்" என ஆதரவு தெரிவித்ததோடு, திராவிட கட்சிகளையும் கண்டித்துள்ளார்.

"பெருமாள்முருகனுக்கு மிரட்டல் விடுத்த சக்திகளை கட்டுப்படுத்துவதை விடுத்து ஆதிக்க சக்திகளுடன் மறைமுகமாக கைகோத்து எழுத்தாளரை அல்லவா அடக்கியிருக்கிறார்கள்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாதொருபாகன் பிரச்சினையில் நடந்தவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, எழுத்தாளர் பெருமாள்முருகன் மீது திணிக்கப்பட்டுள்ள சமூக புறக்கணிப்பை மேலும் உறுதி செய்வதாக அல்லவா இருக்கிறது திராவிட கட்சிகள் மவுனம் சாதிப்பது.

*** தமிழில்: பாரதி ஆனந்த் ***

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x