Published : 04 Apr 2014 12:00 AM
Last Updated : 04 Apr 2014 12:00 AM
தமிழகத்தில் கடந்த 22 ஆண்டுகளாக கிராமிய மணம் கமழும் பாடல்களைக் கணவர் குப்புசாமியுடன் சேர்ந்து பாடி, மூலை முடுக்கெல்லாம் அதைக் கொண்டு சென்றவர் அனிதா குப்புசாமி.
முதல்வர் ஜெயலலிதாவின் துணிவைப் பார்த்து அதிமுக-வில் சேர்ந்ததாகக் கூறும் இவர், இந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பெருமளவு கூட்டத்தை ஈர்க்கும் பேச்சாளராக திகழ்கிறார்.
“தைரியத்தின் வடிவம் எங்கள் அம்மா” என்று தொடங்கும் பாடலை தனது கணீர் குரலில், அழகுத் தமிழில் பாடி, வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கும் அனிதா குப்புசாமி, தனது முதல் தேர்தல் பிரச்சார அனுபவங்களை ’தி இந்து’விடம் பகிர்ந்து கொண்டார்.
அவரது பிரச்சாரம் கட்சிப் பிரமுகர்களை கவர்ந்ததால் திண்டுக்கல் லில் இரண்டாவது நாளாக முகாமிட்டுள்ளார். கிடைத்த இடைவெளியில் அவர் தொலைபேசியில் நமக்களித்த பேட்டி:
முதல் தேர்தல் பிரச்சார அனுபவம் எப்படி இருக்கிறது?
அரசியல் பிரமுகராக மக்களைத் தேடிச் செல்வது இதுதான் முதல்முறை. அறிமுகம் இல்லாத பிரமுகர்களைச் சந்திக்க வேண்டும் என்ற தயக்கம் இருந்தது. 22 ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் பாடி வருகிறேன். எனினும், அரசியல் பிரச்சாரம் சற்று வித்தியாசமான அனுபவமாக உள்ளது. சிறியவர்களும், பெரியவர்களும் நான் வரும்வரை காத்திருந்து என் பேச்சைக் கேட்டு ஆரவாரம் செய்வதை பார்க்கையில் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.
மக்களை கவர எத்தகைய பிரச்சார யுத்தியை கையாள்கிறீர்கள்?
சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் எளிய தமிழில் பேசு கிறேன். மின்மிகை மாநிலம் என்பது எளிமையாக புரியாது. அதையே, ’கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நாம் மின்சாரத்தை அதிகமா தயாரிச்சு, நமக்குப் போக மத்த மாநிலங்களுக்கு வித்தோம். அதுதான் மின்மிகை. விரைவில் அந்த நிலையை மீண்டும் அடைவோம்’ என்று எதார்த்தமாக விளக்குகிறேன்.
பார்த்துப் பழகிய முகம் என் பதால் கூட்டம் தானாகவே கூடிவிடுகிறது. போகும் இடங்களில் சிறுவர், சிறுமியர் அதிகமாக வந்துவிடுவ தால் அவர்களுடன் சேர்ந்து கும்மி அடித்துப் பாட்டுப் பாடி ஒரே ஆடல் பாடல்தான். அப்போது ஆர்வம் மிகுதியில் குழந்தைகளும் பெண்களும் சேர்ந்து ஆடத் தொடங்கிவிடுகிறார்கள்.
அந்த நேரத்தில் அவர்களிடம் தொகுதி வேட்பாளரின் பெயர் என்ன என்று கேட்பேன். அவர்கள் மனதில் நன்கு பதிந்துவிடுவதால் பதிலைச் சரியாகச் சொல்வார்கள். இப்படி எனது பிரச்சாரத்தில் பொதுமக் களையும் பங்கேற்கச் செய்வதால் கட்சித் தொண்டர்களும், வேட் பாளர்களும் அதைப் பெரிதும் ரசிக்கிறார்கள்.
தண்ணீர் பஞ்சம்னு பேசுறாங்க, அம்மா என்ன வச்சிக்கிட்டா தர மாட்டாங்கிறாங்க. இந்த மத்திய அரசுதான் நதிநீர் இணைப்பை அமல்படுத்தாம போச்சு. அதப் பண்ணியிருந்தா இந்த பிரச்சினையே கிடையாது.
போகும் இடங்களில் அதிமுக-வுக்கு வரவேற்பு எப்படி உள்ளது?
மக்கள் மனதில் அலைக்கற்றை ஊழல் இன்னும் மறையவில்லை. ஊழல் ஆட்சியை யாரும் மறக்கவில்லை. கச்சத்தீவை தாரை வார்த்தது முதல், மின் திட்டங்களை சரியாகச் செயல்படுத்தாதது வரை திமுக-வின் தவறுகளைப் பட்டியலிடுகிறேன். மத்திய அமைச் சரவையில் பலமுறை அங்கம் வகித்தும், தமிழக மக்களை திமுக எப்போதும் வஞ்சித்தே வந்துள் ளது. மறுபுறத்தில், தேமுதிக-வை நம்ப மக்கள் தயாராக இல்லை. காங்கிரஸ் கட்சியோ தமிழக மக்களை மாற்றாந்தாய் மனப்பான் மையுடன் நடத்தி வந்துள்ளது.
பிரச்சாரத்தில் பாஜக-வை விமர்சிக்கத் தயங்குகிறீர்களே..?
ஆட்சிக்கட்டிலில் இருந்து காங் கிரஸை அகற்றுவதற்கான தேர்தல் இது. அவர்கள்தான் எங்களது முதல் இலக்கு. இப்போதைக்கு பாஜக-வை விமர்சிப்பதற்கான அவசியம் இல்லை.
மோசமான அனுபவம் ஏதேனும்..?
விழுப்புரத்தில் பேசிவிட்டு காரில் ஏறப்போனபோது, 'பேச வாய் இருக்காது, நாக்கு இருக்காது' என்று எதிர்க்கட்சியினர் மிரட்டல் விடுத்தனர். முதலில் பயமாக இருந்தாலும், இப்போது அந்தப் பயமெல்லாம் பறந்து விட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT