Published : 02 Jan 2015 01:10 PM
Last Updated : 02 Jan 2015 01:10 PM
தமிழகத்திலும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக, பாஜக மீது தமிழக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று வெளியிட்ட அறிக்கை:
'திருவாரூரில் தர்கா சூறையாடல்'
"மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் நாடு முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தமிழகத்தில் அத்தகைய தாக்குதல்கள் இல்லாமல் இருந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை பகுதியில் புத்தாண்டு கொண்டாடிய கும்பல் அங்குள்ள தர்காவை சூறையாடியிருக்கிறது.
நாகூர் தர்காவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய புகழ்பெற்ற தர்காவின் நூறடி நீள சுற்றுச்சுவரை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல் கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்டோர்காயமடைந்துள்ளனர். அப்பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
தஞ்சை மாவட்டம் எப்பொழுதுமே மதநல்லிணக்கத்திற்கு பெருமை சேர்க்கிற மாவட்டமாக இருந்திருக்கிறது. அதை சகித்துக்கொள்ள முடியாத மதவாத சக்திகள் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலத்தை அடித்து நொறுக்குவதை அனுமதிக்க முடியாது. இத்தகைய சக்திகள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவரின் ஆதரவோடு இத்தகைய வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்குமேயானால் இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'விவசாயிகளுக்கு எதிரான அரசு'
கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத்தை திருத்துவதற்கு அவசர சட்டத்தின் மூலம் பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதன் மூலமாக விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கிறது.
இச்சட்டத்தின்படி 70 சதவீத நில உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் அரசு மற்றும் தனியார் துறை இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்த முடியாது என்கிற பிரிவு நீக்கப்பட்டிருப்பது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிற செயலாகும்.
இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக கடந்த மத்திய காங்கிரஸ் அரசு நிறைவேற்றிய சட்டத்தை சீர்குலைக்கிற மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
உற்பத்தி வரி அதிகரிப்புக்கு கண்டனம்
நிதிப் பற்றாக்குறையின் காரணமாக கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு திட்டச் செலவுகளை குறைத்து மக்கள் நலத்திட்டங்களை முடக்கி வருகிறார்கள். சர்வதேசச் சந்தையில் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ரூ.53 டாலராக குறைந்துள்ளது. இதன் மூலம் 50 சதவீதம் விலை குறைந்துள்ளது. அதற்கு ஈடாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மக்கள் மீதிருக்கும் சுமையை இறக்குவதற்கு முயலாத பா.ஜ.க. அரசு மூன்றாவது முறையாக உற்பத்தி வரியைக் கூட்டியிருக்கிறது.
நேற்றைய அறிவிப்பின்படி ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2 உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது. இதன்மூலமாக மத்திய அரசுக்கு ரூ.6,000 கோடி வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே இரண்டு முறை உற்பத்தி வரி உயர்த்தப்பட்டு அதன்மூலம் 10,500 கோடி ரூபாய் வருமானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக வருமானத்தை பெருக்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசு நாட்டு மக்கள் மீதுள்ள சுமையை குறைக்க முன்வராதது மக்கள் விரோத நடவடிக்கையாகும்" என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT