Published : 10 Jan 2015 12:19 PM
Last Updated : 10 Jan 2015 12:19 PM
சென்னையில் நெரிசல் மிக்க பகுதியான பூக்கடை காவல் நிலையத்தின் பின்புறமுள்ளது காசி செட்டித் தெரு. அந்தத் தெருவிலுள்ள பிளாஸ்டிக் கடையின் முன்னே நின்றபடி, அவ்வழியே போகும் பாதசாரிகளை அழைத்து, சாலையை ஒட்டிய சுவரில் மாட்டப்பட்டிருக்கும் காந்தியின் வாழ்வைச் சித்தரிக்கும் 60-க்கும் மேற்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படங்களைக் காட்டி விவரித்துக் கொண்டிருந்தார் ஆனந்தகுமார் பவுமிக்.
பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்திவரும் இவர், கடை வியாபாரம் பற்றி எந்தக் கவலையுமின்றி, வருவோர் போவோரிடமெல்லாம் அந்த அரிய புகைப்படங்களைப் பற்றிய செய்திகளைச் சொல்வதிலேயே ஆர்வமாய் இருந்தார்.
காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிய 100-வது ஆண்டை நினைவுகூறும் வகையில், காந்தி பிறந்த குஜராத்திலுள்ள சபர்மதி ஆசிரமம், கொல்கத்தா, டெல்லி போன்ற இடங்களில் கிடைத்த காந்தியின் அரிய புகைப்படங்களைக் கொண்ட எளிய கண்காட்சியை மக்கள் நெரிசல் மிகுந்த சாலையில் வைத்து, பலரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்த ஆனந்தகுமார் பவுமிக்கிடம் பேசியபோது, “எங்கப்பா வங்காளத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னையில்தான்.
எங்கப்பா சுதந்திரப் போராட்டத்தில கலந்துக்கிட்டவரு. அடிக்கடி ஊர்வலம்னு சொல்லிட்டு கொடியத் தூக்கிக்கிட்டு போயிடுவாருன்னு எங்கம்மா சொல்வாங்க. காந்தி, நேதாஜி போன்ற தலைவர்களை எங்கப்பா நேர்லயே பார்த்துப் பேசியிருக்காரு. என்னோட 8 வயசிலிருந்தே புகைப்படங்களை சேகரிக்க ஆரம்பிச்சிட்டேன். சுதந்திரப் போராட்ட வீரர்களோட படங்களைச் சேகரிச்சேன்.
எனக்கு ரொம்ப பிடித்தமான தலைவர்கள்னா மகாத்மா காந்தியும், எம்.ஜி.ஆரும்தான். எம்.ஜி.ஆரோட படங்களை நிறைய சேத்துட்டேன். அதே மாதிரி காந்தியோட வாழ்க்கையையும் படங்களாத் தொகுக்கணும்னு ஆசைப்பட்டேன்..” என்றபடியே, காந்தியின் கருப்பு வெள்ளைப் படங்களை வாஞ்சையோடு கைகளால் தடவுகிற ஆனந்தகுமாருக்கு 49 வயதாகிறது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், ’எல்லை காந்தி’ கான் அப்துல் கபார்கான், முகம்மது அலி ஜின்னா போன்ற தலைவர்களுடன் காந்தி உரையாடும் காட்சிகள் காலத்தின் அழியாப் பதிவுகளாய் படங்களில் இருக்கின்றன.
“இந்தப் படங்களை எல்லாம் எப்படி சேகரிச்சீங்க..?” என்று கேட்க, “கொஞ்ச நஞ்ச கஷ்டமில்லே. 6 வருசத்துக்கு முந்தி, பிளாஸ்டிக் வித்த காசை எடுத்துக்கிட்டு நான் டிரெய்ன் ஏறிட்டேன். கொல்கத்தா, டெல்லி, குஜராத் போனேன். கொல்கத்தாவில 500 ரூபாய்க்கு கோடாக் ரீல் மாடல் கேமரா ஒண்ணு வாங்கினேன். போன இடத்திலே காந்தி படம் எங்கேயிருந்தாலும் படமெடுத்தேன்.
சில இடங்கள்லே எடுக்க அனுமதிக்கலே. நான் விடாப்பிடியா கெஞ்சிக்கூத்தாடி, ஒரேயொரு படம் மட்டும் எடுத்துக்கிறேன்னு சொல்லிட்டு, மணிக்கணக்கா எல்லாப் படங்களையும் எடுத்தேன். இங்கிருந்து புக் பண்ணிட்டுப்போன டிரெய்ன் டிக்கெட்டை கேன்ஸல் செஞ்சிட்டு, ரெண்டுமூணு நாள் அங்கேயே இருந்து படங்களை எடுத்தேன். அப்புறம், ஓபன் டிக்கெட் எடுத்துட்டு டிரெய்ன் ஏறுவேன். நான் படம் எடுக்க பட்ட கஷ்டத்தைக் கேட்டு, எடுத்திருந்த காந்தி படங்களைப் பார்த்துட்டு டி.டி.ஆர். என்னை ரிசர்வேஷன் கோச்சில ஏத்திக்கிவாங்க..” என்று தனது அனுபவத்தைப் பகிரும் ஆனந்தகுமார் பவுமிக், “எல்லாரும் ஒண்ணா சேர்ந்து போராடி வாங்கினதுதான் இந்திய சுதந்திரம்.
ஆனா, இன்னிக்கு காந்தியைச் சுட்ட கோட்சேவுக்கு சிலை வைக்கிறதைப் பெருமையா சொல்றதும், லக்னோவில கோயில் கட்டுறதும் வருத்தமாயிருக்கு. மத்திய மாநில அரசுகள் மதத்தின் பெயரால் மக்களுக்குள் பிரிவினையை உண்டாக்குகிற செயலை ஒருபோதும் செய்துவிடக்கூடாது என்பதே காந்தியோட படங்களும், அவரோட நினைவுகளும் நமக்குச் சொல்கிற செய்தியாக நினைக்கிறேன்..” என்கிறார்.
தேசத்தின் பிரிவினைக் குரல்களுக்கு எதிரான மவுன முழக்கத்தை தனது கருப்பு வெள்ளைப் படங்களினூடாக இன்னமும் காந்தி சொல்லிக்கொண்டேயிருக்கிறார்.. புகைப்படப் பிரியர் ஆனந்தகுமார் பெளமிக்கின் வழியாகவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT