Published : 08 Jan 2015 10:41 AM
Last Updated : 08 Jan 2015 10:41 AM
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியர் வி. மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா பிறப்பித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதை யடுத்து, முதல்வர் பதவியிலிருந்து விலகியதுடன், எம்எல்ஏ பதவி யிலிருந்தும் தகுதியிழப்பு செய்யப் பட்டார். இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட 2014, செப். 27 முதல் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார். இதுதொடர்பான உத்தரவு அரசாணையாக தமிழக அரசிதழில் கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது.
தேர்தல் ஆணைய விதிமுறை களின்படி, தொகுதி காலியான 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தி, தேர்தல் நடைமுறைகளை முடிக்க வேண்டும். அதன்படி, வரும் மார்ச் 27-க்கு முன்னதாக ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டும்.
இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலையும் இணைத்து நடத்த வாய்ப்புள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கடந்த 5-ம் தேதி தெரிவித்தார். எனவே, வரும் பிப்ரவரியில் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் வி. மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு தமிழக அரசிதழில் நேற்று வெளி யிடப்பட்டது.
வருவாய்க் கோட்டாட்சியர் வி. மனோகரன், மதுரையில் உணவுப் பொருள் வழங்கல் துறையில் பணியாற்றி, அண்மையில்தான் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியராக மாற்றப்பட்டார்.
இதேபோல, திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அண்மையில் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக தேனி மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப் பிடத்தக்கது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் கடந்த நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்துக்குப் பிறகு, ஜன. 5-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலின்படி, மொத்தம் 2,70,129 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 1,33,020 ஆண்கள், 1,37,096 பெண்கள், இதரர் 13 பேர்.
தற்போது இடைத் தேர்தலுக்காக ஸ்ரீரங்கம் தொகுதிக்காக மட்டும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மீண்டும் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT