Published : 20 Jan 2015 03:39 PM
Last Updated : 20 Jan 2015 03:39 PM

ஒகேனக்கல் மலைப் பாதையில் 300 அடி பள்ளத்தில் பஸ் உருண்டு 9 பேர் பலி: 30-க்கும் மேற்பட்டோர் காயம்

ஒகேனக்கல் மலைப் பாதையில் 300 அடி ஆழ பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து உருண்டதில் 9 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் இருந்து தருமபுரி-ஒகேனக்கல் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ் செட்டிக்கு நேற்று சென்ற அரசுப் பேருந்தை சிவக்குமார் என்பவர் ஓட்டிச் சென்றார். 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணித்துள்ளனர்.

மதியம் 1 மணியளவில் ஒகேனக்கல் மலைப் பாதையில் பாறை ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள கொண்டை ஊசி வளைவில் பேருந்து சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலைப் பாதையின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் பாய்ந்தது. சுமார் 300 அடி ஆழம் கொண்ட இந்த பள்ளத்தில் சுமார் 100 அடி ஆழம் வரை உருண்ட பேருந்து பாறைகள் மற்றும் மரங்களால் தடுக்கப்பட்டது. இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் நொறுங்கியது.

பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர். விபத்தில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அதகப்பாடியைச் சேர்ந்த காளியப்பன் (57), வெங்கட்டமாள் (50), மல்லாபுரம் சகாதேவன் (50), பாலக்கோடு அடுத்த கம்மாளப் பட்டியைச் சேர்ந்த மாதம்மாள் (50), அவரது பேத்தி சிவசங்கரி (10), தருமபுரி மணிவண்ணன் (50) மற்றும் அடையாளம் தெரியாத 10 வயதுள்ள ஒரு சிறுவன் என 7 பேர் இறந்தனர். காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுதாகர், துரைசாமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இவர்கள் தவிர வீரமணி, ஓட்டுநர் சிவக்குமார், ராமச்சந்திரன், சம்பத், மாதையன், சிவக்குமார், மகேஸ்வரி, ஈஸ்வரி, சாக்கம்மாள், சோனியா, சித்ரா, சுப்பிரமணி, முத்துசாமி, அருள்நாதன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்ட இவர்கள் பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து ஒகேனக்கல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தலைவர்கள் இரங்கல்

பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்தி:

‘ஒகேனக்கல் மலைப் பாதையில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியும், வேதனையும் தந்தது. விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங் களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் இரங்கல் செய்தி: ‘அரசுப் பேருந்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x