Published : 11 Jan 2015 11:21 AM
Last Updated : 11 Jan 2015 11:21 AM

காஞ்சிபுரம் அருகே சிறுனை ஊராட்சியில் குடிநீரில் கலக்கும் கழிவுநீரால் பரவும் தோல் நோய்: ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் அடுத்த சிறுனை ஊராட்சி பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் தோல் நோய் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம்-வேலூர் நெடுஞ்சாலையை ஒட்டி, காஞ்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது சிறுனை ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள சிறு காலனி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு, ஆழ்துளை கிணற்றிலிருந்து பெறப்படும் தண்ணீரை, குழாய்கள் மூலம் வீடுதோறும் விநியோகம் செய்கிறது ஊராட்சி நிர்வாகம். இந்த குடிநீர் குழாய்கள் கழிவுநீர் கால்வாயின் கீழே புதைக்கப்பட்டுள்ளதால், குழாய்களில் கசிவு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த குடிநீரை பருகும் மக்களுக்கு கை,கால்களில் ஒருவித தோல் நோய் பாதிப்பு உண்டாகி அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சிறுனை பகுதிவாசிகள் கூறியதாவது: கழிவுநீர் கலந்த இந்த குடிநீரை பருகுவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தோல் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். குடிநீர் அல்லாது வேறு ஏதேனும் காரணங்களால் தோல் நோய் ஏற்படுகிறதோ என சந்தேகம் ஏற்பட்டது. எங்கள் பிள்ளைகளை வேறு கிராமங்களில் உள்ள உறவினர் வீட்டில் 10 நாட்கள் தங்கவைத்து சோதித்து பார்த்ததில், தோல்நோய் தாக்குதல் குறைவது தெரிந்தது.

எனவே, குடிநீரில் கலக்கும் கழிவுநீர் காரணமாகவே இந்த நோய் தாக்குதல் ஏற்படுவதாக தெரிகிறது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை. ஊருக்குள் உள்ள முக்கிய நபர்கள் அனைவரும் ஊராட்சி தலைவரின் உறவினர்களாக இருப்பதால், பிரச்சினையை மறைக்கும் விதமாகவே செயல்படுகின்றனர். குடிநீர் குழாயை சீரமைக்க நிதியில்லை என தெரிவிக்கின்றனர். இதனால், கடந்த 3 ஆண்டுகளாக தோல் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் முத்துமீனாள் கூறியதாவது: இந்த பிரச்சினை இதுவரை எனது கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை. இதுகுறித்து, ஊராட்சி தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணராஜ் கூறியதாவது: குடிநீரை பரிசோதிக்காமல் புகார் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. எனவே, அப்பகுதி குடிநீரை பரிசோதனைக்கு உட்படுத்தி, அந்த முடிவை பொறுத்து குடிநீர் விநியோகத்தை சீரமைப்பது குறித்து பரிந்துரைக்கப்படும். எனினும், தற்போது தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி வாசிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x