Published : 12 Jan 2015 10:04 AM
Last Updated : 12 Jan 2015 10:04 AM
14-ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழநி, விருப்பாச்சி மற்றும் உடுமலைப் பேட்டை பகுதிகளை, விஜயநகரப் பேரரசில் இருந்துவந்த பாளையக் காரர்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களில் விருப்பாச்சியை ஆட்சி செய்த பாளையக்காரர்கள் பெரிய, படைத்திறனை வளர்த்துக் கொள்வதற்காக ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டனர். அவர்களுக்கு திண்டுக்கல் அருகே பெரியக் கோட்டைக்காரர்கள், இரும்பாலான அனைத்து வகையான ஆயுதங் களையும் தயாரித்து வழங்கினர்.
இவர்கள் தயாரித்து கொடுத்த ஆயுதங்களை கொண்டுதான், விருப்பாச்சி மலையில் பாளையக் காரர்கள் தங்கள் படைவீரர்களுக்கு பயிற்சி வழங்கினர்.
ஆங்கிலேயர் வருகை தொடங் கியதும் அவர்களுடன் பீரங்கி, துப்பாக்கி உள்ளிட்ட நவீன போர் ஆயுதங்களும் வந்ததால், பெரியகோட்டையில் தயாரான பாரம்பரியமான போர்க் கருவி களுக்கு மதிப்பு குறைந்து மெல்ல மெல்ல அழியத் தொடங்கின. அதனால், பெரியக்கோட்டைக் காரர்கள் போர்க்கருவிகள் தயாரி ப்பதைக் கைவிட்டு, விவசாயத்துக்குத் தேவையான அரிவாள், வெட்டரிவாள், ஈடுட்டி, கடப்பாறை, மண் வெட்டி, சம்மட்டி உள்ளிட்ட கருவிகளைச் செய்யத் தொடங்கினர்.
இவர்கள், தயாரிக்கும் பெரியகோட்டை விருப்பாச்சி வெட்டு அரிவாள், தென் மாவட்டங்களில் மிக பிரபலம். எவ்வளவு ஆண்டுகாலம் ஆனாலும், இந்த அரிவாளின் முனை தேயாது. இந்த அரிவாளின் கூர்மையும், வெட்ட வெட்ட பதம் ஏறும் பக்குவமும், வேறு எந்த அரிவாளுக்கும் இருக்காது. அதனால், பெரியகோட்டை விருப்பாச்சி வெட்டு அரிவாள், மரத்தை ஒரே வெட்டில் இரண்டு துண்டாக்கி விடும்.
அரிவாளின் மூக்கு நீளமாக இருக்கும். எவ்வளது தூரம் ஓங்கி அடித்தாலும் கைப்பிடி உருவாது. அந்தளவுக்கு அதனுடைய பூண் வலிமையானது. பெரிய கட்டைகளையும் தெறிக்காமல் வெட்டக்கூடிய பெரியகோட்டை விருப்பாச்சி அரிவாளை மிக நுட்பமாக தயாரிக்கின்றனர்.
அதனால் திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர் உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பெரியகோட்டை விருப்பாச்சி அரிவாளை தேடி வந்து ஆர்டர் கொடுத்து ஒரு மாதம் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.
ஒரு அரிவாள் விலை ரூ.1,000
வெட்டு அரிவாள் தயாரிக்கும் பட்டறைத் தொழிலாளி என்.அய்யாத்துரை கூறும்போது, எங்கள் முன்னோர் அரசர்களை நம்பி ஆயுதங்களை தயாரித்தனர். இப்போது நாங்கள் விவசாயத்தை நம்பி அரிவாள் தயாரிக்கிறோம். பெரியகோட்டையில் தெருவுக்கு தெரு ஆயுதங்கள் தயாரிப்பு பட்டறை இருந்த காலம் மாறி, தற்போது விரல்விட்டு எண்ணக்கூடிய வாரிசுகள்தான், வெட்டு அரிவாள், மம்பட்டி, ஈட்டி உள்ளிட்ட இரும்பாலான பொருட்களை தயாரிக்கிறோம்.
தற்போது மழையில்லாமல், வேலைக்கு ஆள் கிடைக்காமல் விவசாயம் குறைந்துவிட்டது. அரிவாள் விலை உயர்வால் ஒரு நாளைக்கு ஒரு அரிவாள் தயாரித்து விற்பதே அபூர்வமாகிவிட்டது. ஆயிரம் ரூபாய்க்கு பெரிய ரக வெட்டு அரிவாளும், 300 ரூபாய்க்கு சிறிய ரக வெட்டு அரிவாளும் செய்து கொடுக்கிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT