Published : 17 Jan 2015 12:57 PM
Last Updated : 17 Jan 2015 12:57 PM

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி உயர்வை ரத்து செய்க: ராமதாஸ்

பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படும் நேரத்தில், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. பெட்ரோல் , டீசல் மீதான உற்பத்தி வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் குறைக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் வரிகளையும் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 2.56 குறைந்து ரூ.61.38 ஆகவும், டீசல் விலை ரூ.2.44 குறைந்து ரூ.51.34 ஆகவும் உள்ளது. கடந்த 4 மாதங்களில் பெட்ரோல் விலை 9 முறையும், டீசல் விலை 5 முறையும் குறைக்கப்பட்டிருக்கிறது. இது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.

ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படும் நேரத்தில், இன்னொருபுறம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி தொடர்ந்து உயர்த்தப்படுவது வருத்தமளிக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி நேற்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த வரி உயர்வு மட்டும் தவிர்க்கப்பட்டிருந்தால், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.00 வரை குறைந்திருக்கும். கலால் வரி உயர்வின் காரணமாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் முழுமையான பயன்களை மக்களால் அனுபவிக்க முடியவில்லை.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கிய பிறகு கடந்த 2 மாதங்களில் மட்டும் பெட்ரோல் மீதான கலால்வரி லிட்டருக்கு ரூ. 7.75 ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6.50 ம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.78,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். மாறாக, மக்களுக்கு இதே அளவுக்கு கூடுதல் செலவு ஏற்படும். மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறையை 4.1% என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதை சமாளிப்பதற்கு கூடுதல் வருவாய் தேவைப்படுவதால் தான் கலால் வரி உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அரசின் வருவாயை அதிகரிக்க எத்தனையோ வழிகள் இருக்கும் நிலையில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மீதான விலைகளை உயர்த்த வேண்டுமா? என்று மத்திய அரசு ஒருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது அதற்கு இணையாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கூடுதல் விலை கொடுத்த மக்களுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் அதன் பயன்களை அனுபவிப்பதற்கும் உரிமை உள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வை இரத்து செய்துவிட்டு, கச்சா எண்ணெய் விலை குறைப்புக்கு இணையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x