Published : 04 Jan 2015 03:34 PM
Last Updated : 04 Jan 2015 03:34 PM

டி.சி.எஸ். நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கை அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்

முழுக்க முழுக்க வணிக அடிப்படையிலான காரணத்தின் அடிப்படையில் 25,000 மூத்த வல்லுனர்கள் பணிநீக்கம் செய்யும் டி.சி.எஸ். நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கை அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், மென்பொருள் நிறுவனங்களில் கட்டாய பணிநீக்கம் விவகாரத்தை வேடிக்கப் பார்க்கமால், அதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் செயல்பட்டு வரும் இந்திய மற்றும் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களின் மூத்த பணியாளர்களை கட்டாய பணிநீக்கம் செய்து வெளியேற்றி வருகின்றன. தொழிலாளர் நலச் சட்டங்களையும், மனித உரிமைகளையும் மதிக்காமல் மென்பொருள் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ். (Tata Consultancy Services) தான் அதிக எண்ணிக்கையிலான வல்லுனர்களை வேலைநீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளது. மொத்தம் 25,000 வல்லுனர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், அவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்களை வெளியேற்றி விட்டது. மீதமுள்ளவர்களை அடுத்த மாத இறுதிக்குள் வீட்டுக்கு அனுப்ப டி.சி.எஸ். முடிவு செய்திருக்கிறது.

அதேபோல், ஐ.பி.எம். நிறுவனம் இந்தியாவில் 2500 பேரை வேலை நீக்கம் செய்திருக்கிறது. இன்னும் பல நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான மென்பொருளாளர்களை வெளியில் தெரியாமல் வேலைநீக்கம் செய்து வருகின்றன.

வேலை நீக்கப்படும் பொறியாளர்கள் அனைவரும் 8 முதல் 12 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இடைநிலை மற்றும் முதுநிலை பொறுப்புகளில் இருப்பவர்கள். மென்பொருள் நிறுவனங்களில் முதுநிலை பணியிடங்கள் மிகவும் குறைவு என்பதாலும், குறைந்த ஊதியம் பெறத் தயாராக உள்ள இளைஞர்களை தான் மென்பொருள் நிறுவனங்கள் வேலைக்கு சேர்க்கும் என்பதாலும் இவர்கள் பணி நீக்கப்பட்டால் வேறு நிறுவனங்களில் வேலைக்கு சேருவது கடினம். 30 வயதைக் கடந்து ஏராளமான குடும்பப் பொறுப்புகளுடனும், பொருளாதார சுமைகளுடனும் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் இவர்கள் திடீரென பணிநீக்கப்பட்டால் அவர்களின் எதிர்காலம் நரகமாகிவிடும் என்பதை மறுப்பதற்கு இல்லை.

பணியாளர்களை பணியில் அமர்த்தும் போது சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதைப் போலவே, பணியிலிருந்து ஒருவரை நீக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளும் உள்ளன. அதேபோல், ஒருவரை பணியிலிருந்து நீக்கவும் வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். ஆனால், எந்த காரணமும் இல்லாமல், எந்த விதிகளையும் கடைபிடிக்காமல் ஒரு மணி நேர இடைவெளியில் வேலையை விட்டு வெளியில் போகும்படி ஆணையிடுவது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.

ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத டி.சி.எஸ். நிர்வாகம், "இவையெல்லாம் சாதாரணம்; சில நேரங்களில் கட்டாய வேலை நீக்கம் செய்து தான் ஆக வேண்டும். ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் அளவுக்கு இதில் எதுவும் இல்லை" என்று கருத்து தெரிவித்திருக்கிறது.

இதில் இருந்தே அந்த நிறுவனம் எவ்வளவு திமிரான அணுகுமுறையை கடைபிடிக்கிறது என்பதை அறிய முடியும்.

அனுபவம் வாய்ந்த பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டும்; அவர்களை நீக்கி விட்டால் அவர்கள் ஒருவருக்கு தரும் ஊதியத்தில் இருவரை பணியில் அமர்த்திக்கொள்ள முடியும் என்ற முழுக்க முழுக்க வணிக அடிப்படையிலான காரணத்தின் அடிப்படையில் தான் 25,000 மூத்த வல்லுனர்களை டி.சி.எஸ். பணிநீக்கம் செய்து வருகிறது.

அதேநேரத்தில், 55,000 புதிய ஊழியர்களை பணி நியமனம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது என்பதிலிருந்தே அதன் உண்மையான நோக்கத்தை உணர்ந்து கொள்ளலாம். இத்தகைய தொழிலாளர் விரோத போக்கை அனுமதிக்கக்கூடாது.

திருப்பெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதால் சுமார் 8,000 ஊழியர்கள் வேலை இழந்தனர். பாக்ஸ்கான் நிறுவனம் இப்போது மூடப்பட்டதால் 2,000 பேர் வேலை இழந்துள்ளனர். இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால், அதைவிட பெரிய துரோகத்தை தொழிலாளர் வர்க்கத்திற்கு மத்திய, மாநில அரசுகள் செய்ய முடியாது.

மென்பொருள் நிறுவனங்களில் இருந்து தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதை அந்த நிறுவனங்களின் உள் விவகாரம் என்று கருதி ஒதுங்கியிருக்கக் கூடாது. ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அதை தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

எனவே, மென்பொருள் நிறுவன தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படும் விவகாரத்தில் மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசுகளும் தலையிட்டு இந்த அநீதியை தடுத்து நிறுத்தவேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x