Published : 20 Jan 2015 08:49 AM
Last Updated : 20 Jan 2015 08:49 AM

ஜெயலலிதாவுடன் அருண் ஜேட்லி சந்திப்பு: பாஜகவின் ஊழல் எதிர்ப்பு முகமூடி கிழிந்துவிட்டது - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம்

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்து பேசியதன் மூலம் பாஜகவின் ஊழல் எதிர்ப்பு முகமூடி கிழிந்துவிட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன் மத்திய நிதி யமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. ஊழல் வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு முதல்வர் பதவியை இழந்து ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயலலிதாவை சந்தித்ததன் மூலம் அரசியல் தார்மீக நெறி முறைகளை அருண் ஜேட்லி காலில் போட்டு மிதித்திருக்கிறார். இதன்மூலம் ஊழல் எதிர்ப்பு வேடம் போட்ட பாஜகவின் முகமூடி கிழிந்திருக்கிறது.

சமீபகாலமாக மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்கள் எழுப்புவதை ஜெயலலிதா தவிர்த்து வருவதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. முல்லை பெரியாறு பிரச்சினையில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததை எதிர்த்து ஜெயலலிதா குரல் கொடுக்காதது ஏன்? மதமாற்ற தடைச் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டபோது பாஜகவை அதிமுக ஆதரித்தது ஏன்? அன்று மத்திய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த காப்பீட்டு மசோதாவை எதிர்த்த அதிமுக, இன்றைக்கு ஆதரிப்பது ஏன்?

தமிழர்களின் பாரம்பரிய விளை யாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து 8 மாதங்களாகியும் நீதி மன்ற தீர்வு காண மத்திய அரசை வற்புறுத்தாததற்கு ஜெயலலிதா கூறும் காரணம் என்ன? தற்போது ஜெயலலிதாவை அருண் ஜேட்லி சந்தித்ததின் நோக்கம் என்ன? மத்திய பாஜக அரசோடு சமரச உடன்படிக்கை ஏற்படுத்துவதற்கு ஜெயலலிதா முனைந்துள்ளார்.

இவ்வாறு அறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x