Published : 24 Jan 2015 12:40 PM
Last Updated : 24 Jan 2015 12:40 PM
கிருஷ்ணகிரி அருகே வங்கியில் நள்ளிரவில் ரூ.12 கோடி மதிப்புள்ள 48 கிலோ எடையுள்ள 6033 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். பொதுத்துறை வங்கியான இதற்கு காவலர்களே இல்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராமாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சாமந்தமலை, குட்டூர், பில்லனகுப்பம், திப்பனப்பள்ளி, பச்சகானப்பள்ளி உள்ளிட்ட 52 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கணக்கு வைத்துள்ளனர்.
குறிப்பாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர், ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவ்வங்கியில் நாளொன்றுக்கு ரூ.2 கோடி அளவில் பண பரிவர்த்தனை நடக்கிறது. இவ்வங்கியின் மேலாளராக, ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த உதயபாஸ்கர் (45) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஊழியர்கள் வழக்கம் போல் வங்கியை பூட்டிச் சென்ற னர். நேற்று காலை மேலாளர் உதயபாஸ்கர் வங்கிக்குள் நுழைந்த போது, பாதுகாப்பு பெட்டகம் (லாக்கர்) உடைக்கப்பட்டிருந்த தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து உடனடியாக குருபரப்பள்ளி போலீஸாருக்குத் தகவல் அளித்தார். மாவட்ட எஸ்பி கண்ணம்மாள் மற்றும் போலீஸார் வங்கிக்கு சென்ற விசாரணை மேற்கொண்டனர். வங்கி யின் பின்புறம் உள்ள ஓட்டு வீட்டின் கதவை உடைத்த கொள்ளையர்கள், வங்கியின் கதவுகளை உடைத்து பெட்டகம் இருந்த இடத்துக்குச் சென்றது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமராக்கள் துண்டிப்பு
மேலும், வங்கியின் அலாரம் மற்றும் 8 கண்காணிப்பு கேமராக் களின் ஒயர்களை கொள்ளையர்கள் துண்டித்துள்ளனர். மேலும், மூன்று பாதுகாப்பு பெட்டகங்கள் உள்ளன. இதில் இரண்டாவது பாதுகாப்பு பெட்டகத்தை வெல்டிங் மூலம் வெட்டி எடுத்து உள்ளே இருந்த நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள் ளனர். அதில் மட்டும் 48 கிலோ எடை யுள்ள 6033 பவுன் தங்க நகைகள் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.12 கோடியாகும்.
4 தனிப்படைகள் அமைப்பு
பாதுகாப்பு பெட்டகத்தில் 1500 வாடிக்கையாளர்களின் நகைகள் தனித் தனி பைகளில் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. ஒரு கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் நடமாடியது பதிவாகியுள்ளது. மூன்று நபர்கள் முகமூடி அணிந்து வங்கிக்குள் நுழையும் காட்சி பதிவாகியுள்ளது.
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. வங்கியின் பின்புறம் உள்ள காலி மனையின் தடுப்பு கம்பி வழியாக நுழைந்து குந்தாரப்பள்ளி சந்தை அருகே உள்ள பேருந்து நிறுத்தம் வரை சென்று திரும்பியது. கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள உருவத்தை வைத்து, வடமாநில கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
பாதுகாப்பு குறைபாடுகள்
குந்தாரப்பள்ளி கிராமத்தில் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இவ்வங்கியில் பகலிலோ அல்லது இரவு நேரத்திலோ துப்பாக்கி ஏந்திய காவலர்கள் யாரும் கிடையாது. மேலும், பாதுகாப்பு பெட்டகத்துக்கு அதிநவீன பாதுகாப்பு வசதி இல்லை என போலீஸார் தெரிவித்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய நகை கணக்கு எடுப்பு மாலை 4 மணியைக் கடந்தும் தொடர்ந்தது.
விரைவில் கைது
கொள்ளை சம்பவம் நடந்த வங்கியில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.சங்கர், நேற்று மாலை விசாரணை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வங்கியில் சுமார் 48 கிலோ தங்க நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளன. 3 பேர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு துணையாக மேலும் சிலர் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொள்ளையர்களைப் பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வங்கியில் நடத்திய சோதனையில் முக்கிய தடயம் சிக்கியுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். கொள்ளையிலிருந்து தப்பிய நகை, பணம் குறித்து வங்கி அதிகாரிகள் கணக்கு பார்த்து வருகின்றனர் என்றார்.
வாடிக்கையாளர்கள் சாலை மறியல்
கொள்ளை சம்பவம் நடந்ததை அறிந்த நகை அடகு வைத்திருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்து வங்கி முன் திரண்டனர். நகைகளை திரும்ப தரத் கோரியும், எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பது குறித்து வங்கி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என வங்கியின் முன் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர். பொதுமக்களிடம் எஸ்பி கண்ணம்மாள் பேசும்போது,
‘விரைவில் கொள்ளையர்கள் பிடிக்கப்படுவார்கள். நகைகள் மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கப்படும். நகைகள் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது, மக்கள் அச்சப்பட வேண்டாம்’ என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மறியலை கைவிட்ட மக்கள் தொடர்ந்து வங்கி முன் கண்ணீருடன் காத்திருந்தனர்.
சேலம் சரக டிஐஜி வித்யாகுல்கர்னி, வங்கியின் உள்ளே ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். குந்தாரப்பள்ளியில் 100-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், வங்கியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் ஆந்திரம் மற்றும் கர்நாடக எல்லை அமைந்துள்ளதால் கொள்ளையர்கள் இவ்வழியே தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT