Published : 10 Apr 2014 12:00 AM
Last Updated : 10 Apr 2014 12:00 AM
கோயம்பேடு - எழும்பூர் இடையேயான சுரங்கப் பாதையில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.
சென்னையில் ரூ.14,600 கோடி செலவில் இருவழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் கட்டமாக வரும் அக்டோபர் மாத இறுதியில் கோயம்பேடு ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கவுள்ளது. அதுபோல கோயம்பேடு எழும்பூர் இடையே சுரங்கப்பாதையில் அடுத்த ஆண்டு இறுதியில் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
கோயம்பேடு எழும்பூர் இடையே நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், திருமங்கலம் ஆகிய 7 மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
சுரங்கப் பாதையைப் பொருத்தவரை மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக தனித்தனியாக இரண்டு டனல்கள் அமைக்கப்படுகின்றன. பூந்தமல்லி நெடுஞ்சாலையில், எழும்பூர் நேரு பூங்கா இடையேயும், ஷெனாய் நகர் அண்ணாநகர் டவர் இடையேயும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுவிட்டது.
இங்கு சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ராட்சத டனல் போரிங் மிஷின்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. இப்போது இரண்டு டனல் போரிங் மிஷின்கள் பச்சையப்பன் கல்லூரியில் இருந்து ஷெனாய் நகரை நோக்கி சுரங்கம் தோண்டுகிறது. வேறொரு இடத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மற்றொரு டனல் போரிங் மிஷின் நேரு பார்க்கை நோக்கி சுரங்கம் தோண்டுகிறது.அதுபோல அண்ணாநகர் டவரில் இருந்து திருமங்கலத்தை நோக்கி இரண்டு டனல் போரிங் மிஷின்கள் மே முதல்வாரத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் கோயம்பேடு - எழும்பூர் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்படும். அதையடுத்து 4 மாதங்களில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம், பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்தாண்டு டிசம்பரில் கோயம்பேடு எழும்பூர் இடையே சுரங்கப் பாதையில் முதலாவது மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
மெட்ரோ ரயில் திட்டத்தின் மற்றொரு பகுதியாக சென்னை சென்ட்ரல் மெட்ரோ சுரங்க ரயில் நிலையம் தரையில் இருந்து 100 அடி ஆழத்தில் அமைக்கப்படுகிறது. மிகப்பெரிய சுரங்க ரயில் நிலையம் என்பதாலும், இரண்டு அடுக்கு சுரங்க ரயில் நிலையம் அமைக்கப்படுவதாலும், மொத்தம் 100 அடி ஆழத்தில் 25 அடிக்கு பாறைகள் இருப்பதாலும் இந்த ரயில் நிலையம் அமைப்பது சவாலான பணியாக இருக்கிறது. இருப்பினும், 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இப்பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT