Published : 08 Jan 2015 12:39 PM
Last Updated : 08 Jan 2015 12:39 PM

கரும்புக்கான ஆதாய விலை ரூ.2,650 ஆக நீடிப்பு: தமிழக விவசாயிகள் கடும் அதிருப்தி

2014-15 ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.2,650 ஆதாய விலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரும்புக்கான ஆதாய விலையை இந்த ஆண்டு அரசு உயர்த்தாதற்கு விவசாயிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கரும்புக்கு நிர்ணயித்த விலையான டன் ஒன்றுக்கு 2,200 ரூபாயுடன், மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட 450 ரூபாய் உயர்த்தி, டன் ஒன்றுக்கு 2,650 ரூபாய் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என முதல்வர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கரும்பு உற்பத்தியைப் பெருக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும் அதே வேளையில், கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு அறிவித்து வரும் நியாயமான மற்றும் ஆதாய விலையை விடக் கூடுதலான விலையை தமிழக அரசு வழங்கி வருகிறது.

2011-12 ஆம் ஆண்டு டன் ஒன்றுக்கு 2,100 ரூபாய் எனவும்; 2012-13 ஆம்ஆண்டுக்கு 2,350 ரூபாய் எனவும்; 2013-14 ஆம் ஆண்டுக்கு 2,650 ரூபாய் எனவும் கரும்பின் விலையை முன்னாள் முதல்வர் நிர்ணயித்தார்.

இந்நிலையில், 2014-15 ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு 2,200 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது.

தற்போது சர்க்கரைத் தொழிலில் நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அண்டை மாநிலமான கர்நாடகம் மத்திய அரசு அறிவித்த ஆதாய விலையான டன் ஒன்றுக்கு 2,200 ரூபாய் என்ற விலையை முதலில் வழங்கவும், பின்னர் டாக்டர் ரங்கராஜன் குழு பரிந்துரையான வருவாய் பகிர்மான கொள்கைப்படி விலை நிர்ணயம் செய்வதற்கும் முடிவு செய்துள்ளது.

இதே அடிப்படையில், மகாராஷ்டிரா மாநில அரசும் முடிவு செய்துள்ளது.

இருப்பினும், தமிழக கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அரசு கரும்புக்கு நிர்ணயித்த விலையான டன் ஒன்றுக்கு 2,200 ரூபாயுடன், மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட 450 ரூபாய் உயர்த்தி, டன் ஒன்றுக்கு 2,650 ரூபாய் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் அதிருப்தி:

கரும்புக்கான ஆதாய விலையை இந்த ஆண்டு அரசு உயர்த்தாதற்கு விவசாயிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அதே 2,650 ரூபாய் வழங்குவதால் எந்த பயனும் இல்லை விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x