Published : 19 Jan 2015 08:38 AM
Last Updated : 19 Jan 2015 08:38 AM

நெல்லை நகருக்குள் சிறுத்தை புகுந்ததால் பீதி: தாக்கியதில் 4 பேர் காயம்: 3 மணி நேரத்தில் பிடிபட்டது

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமால்நகருக்குள் நேற்று சிறுத்தை புகுந்தது. அங்கிருந்த வீடுகளுக்குள் சிறுத்தை நுழைந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். சிறுத்தை தாக்கியதில் ஊராட்சி தலைவர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின் சிறுத்தை பிடிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ளது திருமால் நகர். நேற்று காலை 6 மணி அளவில் சிலர் இப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டபோது புதரில் இருந்து ஒரு விலங்கு பாய்ந்து ஓடுவதை பார்த்தனர். முதலில் அதை நாய் என்று நினைத்துள்ளனர். பின்னர் கூர்ந்து பார்த்த போது தாவி ஓடியது சிறுத்தை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இத்தகவல் காட்டுத்தீ போல பரவியதால் அப்பகுதியில் மக்கள் கூடினர். கூட்டத்தைப் பார்த்ததும் சிறுத்தை அங்கிருந்த வீட்டு சுவர் களில் ஏறி குதித்து மாடிகள் வழியாக ஓடியது. இதைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

4 பேர் காயம்

சிறுத்தை அங்குமிங்கும் சுற்றித் திரிந்ததால் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவேண் டாம் என்று, ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரித்தனர். மாடி விட்டு மாடி தாவிக் கொண்டிருந்த சிறுத்தை, மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்ததும் மெதுவாக தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கியது.

அப்போது அப்பகுதியில் நின்றிருந்த காடுவெட்டி ஊராட்சி தலைவர் உ.ஆறுமுகம் என்ற துரை (44) மீது பாய்ந்தது. இதில் அவர் காயமடைந்தார். தீயணைப்புத் துறை வாகன ஓட்டுநர் சு. சுரேஷ்குமார் (43), சிறுத்தையை படம் பிடித்த தனியார் தொலைக்காட்சி கேமராமேன்கள் மீரான்கனி, மாணிக்கம் ஆகியோரும் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தனர். 4 பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மயக்க ஊசி செலுத்தினர்

இதையடுத்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் சிறுத்தை பதுங்கியபோது கால்நடை மருத்துவர்கள் அதன் மீது மயக்க ஊசியை செலுத்தினர். ஊசி உடலில் செலுத்தப்பட்டதும் அரைகுறை மயக்கத்தில் அங்கிருந்து ஓடிய சிறுத்தை, குளியலறைக்குள் சென்று பதுங்கியது. உடனே குளியலறையின் கதவை மூடி சிறுத்தையை சிறைவைத்தனர்.

கூண்டுக்குள் அடைப்பு

பின்னர் களக்காடு- முண்டந் துறை புலிகள் காப்பகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட இரும்பு கூண்டு குளியலறையின் கதவை ஒட்டியவாறு வைக்கப்பட்டது. சிறிது நேரத்துக்கு பின் குளியலறை கதவை திறந்து மயக்கத்தில் இருந்த சிறுத்தையை வனத்துறையினர் கயிறு கட்டி பிடித்து கூண்டுக்குள் அடைத்தனர்.

காலை 10.30 மணிக்கு சிறுத்தை கூண்டுக்குள் அடைக்கப்பட்டது. பின்னர் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் சிறுத்தை விடப்பட்டது.

இளைஞர்கள் ஒத்துழைப்பு

சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத் திய கால்நடை மருத்துவர் முத்து கிருஷ்ணன் கூறும்போது, “வீட்டு மாடிகள் வழியாக தாவிக்குதித்து சென்று கொண்டிருந்த சிறுத்தைக்கு முதல்கட்டமாக ஒரு மயக்க ஊசியை செலுத்தினோம்.

பின்னர் மாடியில் இருந்து இறங்கி அங்குள்ள சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் கழிவறைக்குள் சென்று பதுங்கியது. உடனே கழிவறையின் கதவை பூட்டிவிட்டு, ஜன்னல் வழியாக மற்றொரு மயக்க ஊசியை செலுத்தினோம். இதில் சிறுத்தை மயங்கியது. பின்னர் அதன் கழுத்தில் கயிறை கட்டி மீட்டோம். பொதுமக்களும், இளைஞர்களும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தனர்” என்று தெரிவித்தார்.

களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக தலைமை வன பாதுகாவலர் ஏ.வெங்கடேஷ் கூறும்போது, ‘‘திருமால்நகருக்கு வந்தது மூன்றரை வயதுள்ள ஆண் சிறுத்தை. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலிருந்து வந்திருக்கலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x