Published : 11 Jan 2015 10:44 AM
Last Updated : 11 Jan 2015 10:44 AM
கரும்புத் தோட்டத்தை நாசப்படுத்திய 35-க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள், 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தன. அவற்றை மீட்க வனத் துறை, தீயணைப்புத் துறையினர் முயற்சி செய்தனர். இரவு வரை 26 பன்றிகள் மீட்கப்பட்டன.
காட்டுப்பன்றியின் தொந்தரவிலிருந்து தங்களை காப்பாற்றாததால் ஆவேசமடைந்த விவசாயிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே உள்ளது மருதூர் கிராமம். இங்குள்ள மலையடிவார கிராமங்களில் யானைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. இதிலிருந்து தங்கள் விளைச்சலை பாதுகாக்க பல்வேறு வகையில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந் நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மருதூர் கிராமத்தில் சுப்பையன் என்பவரது கரும்புத் தோட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன. இங்கு தடுப்புச்சுவர் இல்லாத 80 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. அதிகாலையில் கரும்புகளை பதம் பார்த்துக்கொண்டிருந்த பன்றிகள் அத்தனையும் ஒன்றன்பின் ஒன்றாக கிணற்றுக்குள் விழுந்துள்ளன. கிணற்றுக்குள்ளிருந்து சத்தம் கேட்கவே, அங்கு சென்று பார்த்தபோது, கிணற்று நீரில் காட்டுப்பன்றிகள் தத்தளித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில் மேட்டுப் பாளையம் வனத்துறை ரேஞ்சர் நசீர் தலைமையில் 15-க்கும் மேற்பட்டோர் மீட்பு நடவடிக்கைக்காக வந்தனர். பொதுவாக காட்டுப்பன்றிகள், மண்ணை ஆழமாகக் கிளறி கிழங்கு, அடிக்கரும்பு வரை உண்ணக் கூடியவை. ஆட்களை மட்டுமல்ல, யானையை அடிக்கும் பலம் கொண்டவை.
மூக்கில் உள்ள சிறிய கொம்பால் தாக்குதல் நடத்தக் கூடியவை என்பதால், என்ன செய்வதென்று புரியாமல் திகைத்த வனத்துறையினர், தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். அவர்களும் வந்து ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கே கூடிய விவசாயிகள் ஆத்திரமடைந்தனர்.
‘காட்டுப்பன்றிகள் தொல்லை, யானைகள் தொல்லை... காப்பாற்றுங்கள் என்று அழைத்தபோதெல்லாம் வராத நீங்கள், இப்போது காட்டுப்பன்றியை காப்பாற்ற மட்டும் அவசரமாக வந்திருக்கிறீர்கள். முதலில் விவசாயிகளை காப்பாற்ற வழி சொல்லுங்கள், அதற்குப் பிறகு பன்றிகளை காப்பாற்றலாம்’ என்று வாக்குவாதம் செய்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சிலர், பன்றிகளை காப்பாற்ற கிணற்றுக்குள் இறங்க முயற்சித்தபோது, ‘நீங்கள் தீர்வு சொல்லாமல் கிணற்றில் இறங்கினால், நாங்களும் கிணற்றில் குதித்துவிடுவோம்’ என்று கூறி கிணற்றை சுற்றி நின்று போராடத் தொடங்கினர். அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்த முயற்சித்தபோது, ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு, ‘எங்களுக்கு தீர்வு சொல்லிவிட்டு காட்டுப் பன்றிகளை காப்பாற்றுங்கள்’ என்று சாலையில் அமர்ந்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய மறியல் மாலை 3 மணி வரை நீடித்தது.
இரவு வரை நீடித்த மீட்புப் பணி
மின் கம்பிவேலியில் தாக்குண்டு யானை இறந்ததால் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை சம்பந்தப்பட்ட விவசாயியின் தோட்டத்துக்கு திரும்ப வழங்குவது, வனவிலங்குளால் ஏற்படும் சேதம் காரமடை ஒன்றியத்தில் மிகுதியாக இருப்பதை கணக்கில் கொண்டு, சேதமடையும் வேளாண் பொருட்களுக்கு இழப்பீடு வழங்க ஆட்சியரிடம் வனத்துறை பரிந்துரைப்பது என சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
தொடர்ந்து மாலை 3 மணியளவில் வலைகளை கொண்டு, கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகளை மீட்கும் பணியை ஆரம்பித்தனர் தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர். மாலை 5 மணி வரை 26 காட்டுப்பன்றிகள் உயிருடன் மீட்கப்பட்டதாகக் கூறப்பட்டது. வலை சேதமடைந்ததால் கயிற்றில் சுருக்கு ஏற்படுத்தி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்படியும் ஒரு பெரிய பன்றியை மீட்க முடியாததால், கிரேன் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு வரை மீட்புப் பணி தொடர்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT