Published : 02 Jan 2015 12:07 PM
Last Updated : 02 Jan 2015 12:07 PM

மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டம்.. மக்கள் உற்சாகம்!

சென்னையில் நேற்று புத்தாண்டை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். இளைஞர்கள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடினர். கோயில்களில் சிறப்பு பூஜைகளும், கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேஷ பிரார்த்தனைகளும் நடத்தப் பட்டன.

ஆங்கிலப் புத்தாண்டு 2015 தமிழகம் முழுவதும் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னையில் புத்தாண்டை வரவேற்க நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கே மெரினா கடற்கரையில் இளைஞர்கள் கூடினர். புத்தாண்டு பிறந்ததும் அங்கு கூடியிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தும், கேக் வெட்டி, இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அப்போது வாண வேடிக்கையும் நடத்தப்பட்டது.

அதேநேரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் 2014-ம் ஆண்டை வழியனுப்பியும், புத்தாண்டு 2015-ஐ வரவேற்றும் திருப்பலிகள், சிறப்பு ஆரா தனைகள் நடைபெற்றன. உலகப் புகழ்பெற்ற மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயத்தில் ஏராளமானோர் கூடி புத்தாண்டு விசேஷ பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

பல கோயில்களில் நேற்று அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பொதுமக்கள் புத்தாடை அணிந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் இளைஞர்கள் குழுக் களாக சேர்ந்து ஆடி, பாடி மகிழ்ந் தனர். பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டின் முன்பு வண்ணக் கோலமிட்டு புத்தாண்டை வரவேற் றனர். கடந்த ஆண்டுகளில் நண்பர்கள், உறவினர்களுக்கு எஸ்.எம்.எஸ்., பேஸ்புக் மூலம் பொதுமக்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்த ஆண்டு இந்த இரண்டையும்விட வாட்ஸ்-அப் மூலமாகவே பெரும்பாலானோர் புத்தாண்டு வாழ்த்து தெரி வித்தனர். வாட்ஸ்-அப்பில் வாசகங்களாகவும், வண்ண, வண்ண சித்திரங்கள் மற்றும் கார்ட்டூன்களாகவும் புத்தாண்டு வாழ்த்து இடம்பெற்றிருந்தது.

அதுமட்டுமல்லாமல், சென்னை புறநகரில் உள்ள தனியார் கேளிக்கை பூங்காக்கள், வண்டலூர் உயிரியல் பூங்கா, சென்னை கிண்டி தேசிய சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் போன்ற இடங்களிலும், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு குறைவில்லை.

அரசியல் கட்சியினர் தங்களது தலைவர்களை நேரில் சந்தித்து பூச்செண்டு, சால்வை அணிவித்து புத்தாண்டு வாழ்த்து கூறி மகிழ்ந்தனர். சில பகுதிகளில் இசை நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. புத்தாண்டும், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நேற்று ஒரே நாளில் வந்ததால் கோயில்களில் வழக்கத்தைவிட அதிக கூட்டம் இருந்தது.