Published : 09 Apr 2014 11:44 AM
Last Updated : 09 Apr 2014 11:44 AM

தமிழகத்தில் பாஜக கூட்டணி 20 இடங்களை கைப்பற்றும்: பாஜக துணைத் தலைவர் ஹெச்.ராஜா பேட்டி

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கியுள்ள பாஜக துணைத் தலைவர் ஹெச்.ராஜா, ஓட்டு வேட்டைக்கு நடுவில் ‘தி இந்து'-வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி.

பாஜக-வின் ’பி’ டீம்தான் அதிமுக என்று ப.சிதம்பரம் சொல்கிறாரே?

7 சதவிகித வட்டியில் கார் கடன்; 16 சதவிகித வட்டியில் கல்விக் கடன். இதுதான் சிதம்பரத்தின் சாதனை. ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பற்றி பாஜக எதுவுமே சொல்லாத நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்தால் அத் திட்டத்தை நிறுத்திவிடுவார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்கிறார் சிதம்பரம். தமிழகத்தில் 35 சதவிகித வாக்குகளைப் பெறப்போகிற நம்பர் ஒன் டீம் நாங்கள்தான்.

20 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றி, தமிழகத்தில் அதிக இடங்களை வென்றெடுத்த கூட்டணியாகவும் நாங்கள்தான் இருப்போம். காங்கிரஸுக்கு ஒரு இடத்தில்கூட டெபாசிட் கிடைக்காது.

பாஜக தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில், பொதுசிவில் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் ஆர்டிக்கிள் 370-வது பிரிவு நீக்கம் என சர்ச்சைக்குரிய விஷயங்களை சொல்லி இருப்பதன் மூலம் பாஜக-வின் உண்மையான முகம் வெளிப்படுவ தாக சொல்லப்படுகிறதே?

அயோத்தியில் ராமர் கோயில் இருந்த இடத்தில் மசூதி இருப்பதாக உயர்நீதிமன்றமே கூறியுள்ளதால், அங்கு ராமர் கோயில் கட்டப்படும் என்கிறோம். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பது குறித்து உச்சநீதி மன்றமே கேள்வி எழுப்பி இருக்கிறது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள ஆர்டிகிள் 370-வது பிரிவு சலுகை நிரந்தமானது அல்ல. எனவேதான் அதையும் நீக்குவோம் என்கிறோம்.

குஜராத் மின்மிகை மாநிலம் என்கிறீர்கள். ஆனால் அங்கு, 11 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பே இல்லை என்கிறாரே தா.பாண்டியன்?

குஜராத் வளர்ச்சியை அங்கு போய் பார்த்தால்தான் தெரியும். போயஸ் கார்டன் கதவை பூட்டி விட்டார்கள் என்கிற பேதலிப்பில் எதையாவது தா.பாண்டியன் பேசக்கூடாது.

உங்களை எதிர்த்துப் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் தனது வேட்பு மனுவில் உண்மைகளை மறைத்து விட்டதாக வருமான வரித்துறை ஆணையர் ஸ்ரீவத்ஸவா அஃபிட விட் தாக்கல் செய்திருக்கிறாரே?

பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்று போலியான கம்பெனிகள் பெயரில் வெளிநாட்டிலிருந்து 5,000 கோடி கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வந்து வெள்ளை ஆக்கி இருக்கிறது. இதுதொடர்பாக ஸ்ரீவத்ஸவா அந்த சேனல் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உடனே அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி பணி நீக்கம் செய்தார்கள். ஆனால், நீதிமன்றத்தில் அந்தக் குற்றச்சாட்டை பொய்யாக்கி மீண்டும் பணியில் சேர்ந்தார் வத்ஸவா.

தன்னை நாணயஸ்தர் என்று சொல்லிக்கொள்ளும் அந்த முக்கியப் புள்ளிக்கு 2-ஜி விவகாரத்தில் கிடைத்த பங்குதான் இந்த 5,000 கோடி. இதை கோர்ட்டில் சொன்னதுக்காக வத்ஸவாவுக்கு மனநோயாளி பட்டம் கட்டினார்கள். ஆனால், அதையும் முறியடித்தார் வத்ஸவா. ’நீங்களும் உங்கள் மகனும்தான் 5,000 கோடியை பெற்றிருக்கிறீர்கள்’ என்று நாணயப் புள்ளிக்கு ராம்ஜெத் மலானி எழுதிய கடிதமும், அதற்கு நாணயப் புள்ளி எழுதிய பதிலும் என்னிடம் இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் இதெல்லாம் மீண்டும் விசாரிக்கப்படும்.

ஸ்ரீவத்ஸவாவின் புகாரின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்தின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்திருக்க வேண்டும். என்ன நெருக்கடியோ நிராகரிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x