Published : 18 Jan 2015 11:23 AM
Last Updated : 18 Jan 2015 11:23 AM

நோட்டுப் புத்தகம் உட்பட காகிதப் பொருட்களின் சில்லறை விலை திடீர் உயர்வு

நோட்டுப் புத்தகங்கள் உட்பட காகிதப் பொருட்களின் சில்லறை விலை திடீரென 10 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்ததே இதற்கு காரணம் என்கின்றனர் வியாபாரிகள்.

காகிதப் பொருட்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து கல்வி நிறுவனங்கள், பெட்டிக் கடை முதல் பெரிய கம்பெனிகள் வரை பல்வேறு விதத்தில் நோட்டுப் புத்தகங்களும், இதர காகிதப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் பேப்பர் மில்கள் காகிதப் பொருட்களை தயாரித்து விற்கின்றன. இந்த மில்களுக்கு பலவழிகளில் நெருக்கடி ஏற்பட்டதால் இத்தொழில் படிப்படியாக நலியத் தொடங்கியது.

காகித உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான மரக்கூழ் தயாரிப்பதற்காக ஏராளமான மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டன. அளவுக்கு அதிகமாக மரங்கள் வெட்டப்படுவதால் மழைப்பொழிவு குறைந்தது. அதனால், வனம் அழிக்கப்படுவதைத் தடுக்க, கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. தொழிலாளர் பிரச்சினை, மின் தட்டுப்பாடு, தண்ணீர் பற்றாக்குறை ஆகியவை காரணமாக சில தனியார் பேப்பர் மில்கள் மூடப்பட்டன. காகித உற்பத்தித் தொழிலில் பெரிய நிறுவனங்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கின்றன.

இந்தியாவில் தேவையான அளவுக்கு காகிதக்கூழ் கிடைக்காததால், இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. போக்குவரத்து செலவு காரணமாக காகிதப் பொருட்கள் விலை உயரத் தொடங்கியது.

இதுகுறித்து சென்னை காகிதம் மற்றும் அட்டை தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர் எம்.ஷேக் அப்துல்லா கூறியதாவது:-

இந்தோனேஷியாவில் காடுகளை அழிக்கும் அதே அளவுக்கு ஐந்து மடங்கு மரங்களை நடுகின்றனர். அதனால் அந்த நாட்டில் இருந்து உலக நாடுகளுக்கு ஆண்டுமுழுவதும் காகிதக்கூழ் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அத்தகைய நிலை இந்தியாவில் இல்லை என்பதால் போதியளவு காகிதக்கூழ் கிடைப்பதில்லை. எனவே, மாதந்தோறும் 50 முதல் 100 டன் காகிதக்கூழ் இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

அப்போது, அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஏற்ப காகிதக்கூழ் இறக்குமதி செலவு அதிகரிக்கிறது. அதன் காரணமாக, நோட்டுப் புத்தகம் உள்பட அனைத்து காகிதப் பொருட்களின் சில்லறை விலை ஆண்டுதோறும் 10 முதல் 15 சதவீதம் உயர்கிறது. கடந்த 10 நாட்களில் டாலர் மதிப்பு 60-ல் இருந்து 64 ஆக உயர்ந்தது. அதனால், காகிதப் பொருட்களின் சில்லறை விலை 10 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்றார் ஷேக் அப்துல்லா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x