Published : 17 Jan 2015 08:41 AM
Last Updated : 17 Jan 2015 08:41 AM
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் நேற்று கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு 8 மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த தடையால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காளைகளை அவிழ்த்து விடுவதற்கு கிராம மக்கள் திட்டமிட்டதால், அதை தடுப்பதற்கு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய கிராமங்களில் போலீஸார் முன்கூட்டியே குவிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்காததால், மதுரை அவனியா புரத்தில் பொதுமக்கள் நேற்று முன்தினம் கருப்புக்கொடி ஊர்வலம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும். ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டதால் அதிகாலை முதல் இரவு வரை பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது. வாடிவாசல் பகுதிக்கு யாரும் காளைகளை அழைத்து வந்துவிடாமல் இருப்பதற்காக போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். சம்பிரதாயத்துக்காக மஞ்சமலை, அய்யனார்சாமி காளைகளை மக்கள் வீதிகளில் பிடித்து வந்தனர். போலீஸார் தடுத்து நிறுத்தி காளைகளை திருப்பி அனுப்பினர்.
மேலும், பாலமேடு பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாடிவாசல், கடை வீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கருப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது. பாலமேட்டில் பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடையால் கிராமத்தில் சோகம் நிலவியது என மகாலிங்கசாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் மற்றும் விழாக் குழுவினர் தெரிவித்தனர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தடையைக் கண்டித்து அலங்கா நல்லூரில் வியாபாரிகள் நேற்று கடைய டைப்புப் போராட்டம் நடத்தினர். வாடிவாசல் மற்றும் கடைகள், வீடுகளில் கருப்புக்கொடி கட்டப்பட்டிருந்தது.
இதுகுறித்து அலங்காநல்லூர், பாலமேடு கிராம மக்கள் கூறியபோது,
‘‘உலகப்புகழ் பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இந்த ஆண்டு முத்தாலம்மன், முனியாண்டி சுவாமி, அரியமலைசாமி கோயில்களில் வழக்கம்போல் கோயில் காளைகளை வைத்து நடைபெற வேண்டிய பூஜைகள் நடக்கவில்லை.காளைகளை வாடிவாசலுக்கு அழைத்து வந்தால் கட்டாயம் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். இல்லையென்றால் தெய்வக் குற்றமாகிவிடும். வீரவிளையாட்டு தொடர்ந்து நடைபெற மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.
வெளிநாட்டினர் ஏமாற்றம்
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டை பார்ப் பதற்காக ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 200 வெளி நாட்டினரும், வட இந்தியாவில் இருந்து 50 சுற்றுலாப் பயணிகளும் மதுரை வந்திருந்தனர். ஜல்லிக்கட்டு நடைபெறாததால் அந்த வீரவிளை யாட்டைப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT