Published : 17 Jan 2015 11:53 AM
Last Updated : 17 Jan 2015 11:53 AM

மத நம்பிக்கைகள் மீதான தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும்: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மத நம்பிக்கைகள் மீது கார்ட்டூன் தாக்குதல் நடத்துவதையோ, வேறு வகையில் அதன் நம்பிக்கைகளை கேலி செய்வதையோ, களங்கப்படுத்துவதையோ அனுமதிக்க முடியாது. மத நம்பிக்கைகள் மீதான தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக இன்று இந்திய தவ்ஹீத் ஹமாஅத் வெளியிட்ட அறிக்கையில், ''பிரான்ஸ் நாட்டுத் தலைநகரமான பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ என்ற கார்ட்டூன் பத்திரிகை அலுவலகத்தில் நடந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக கருதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேலி செய்து சார்லி ஹெப்டோ இதழ் சித்திரம் வரைந்திருந்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடைபெற்றது என்ற போதிலும், இதுபோன்ற வன்முறைத்தனமான தாக்குதல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதை வெளிப்படுத்தும் வகையில் உலக முஸ்லிம் சமுதாயம் சார்லி ஹெப்டோ அலுவலகத்தின் மீதான தாக்குதல்களை கண்டித்தது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட தமிழக இஸ்லாமிய அமைப்புகள் உள்பட, இந்தியாவின் அத்தனை இஸ்லாமிய கட்சிகளும், அமைப்புகளும்கூட கண்டனம் தெரிவித்திருந்தன.

அதே சமயம், சார்லி ஹெப்டோ இதழ் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கார்ட்டூன்களை வெளியிடுவதை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என உலகம் முழுவதிலுமுள்ள நடுநிலையாளர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தாக்குதலுக்குப் பின் வெளியான முதல் இதழில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேலி செய்யும் வகையில் முகப்பு கட்டுரையில் கார்ட்டூன் வெளியிட்டு தனது விஷச் சிந்தனையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது சார்லி ஹெப்டோ.

முஸ்லிம்கள் நம்புகின்ற இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு உருவப் படங்களோ ஓவியமோ கிடையாது. அப்படியிருக்கும்போது அவரைப் பற்றிய ஒரு சித்திரம் வரைவது என்பது ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகை காயப்படுத்தும் செயலாகும்.

பிரான்ஸ் நாட்டு முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், சார்லி ஹெப்டோ இதழின் செயலை பிரான்ஸ் அதிபர் பிரன்சாய் ஹொல்லான்டே நியாயப்படுத்தி, ஆதரவளித்து வருவதும், இஸ்லாம் சொல்லாத - அதன் போதனைகளுக்கு முரணாக சார்லி ஹெப்டோ அலுவலகத்தின் மீது தனிநபர்கள் நடத்திய தாக்குதலை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி, தீவிரவாத இஸ்லாத்திற்கு எதிராக போர் அறிவிக்கப்பட்டு விட்டதாக பிரான்ஸ் பிரதமர் மானுவல் வால்ஸ் பேசியிருப்பதும் கவலைக்குரியது; கண்டனத்திற்குரியது.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மத நம்பிக்கைகள் மீது கார்ட்டூன் தாக்குதல் நடத்துவதையோ, வேறு வகையில் அதன் நம்பிக்கைகளை கேலி செய்வதையோ, களங்கப்படுத்துவதையோ அனுமதிக்க முடியாது. அதனை தடுக்கும் வகையில் பிரான்ஸ் அரசு சட்டங்களை இயற்ற வேண்டும். இதற்கென, பல்வேறு மத நம்பிக்கை சார்ந்த மக்களைக் கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும், சர்வதேச சமுதாயமும் பிரான்ஸ் அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும். உலக அரங்கில் மத நம்பிக்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் '' என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x