Published : 05 Jan 2015 12:41 PM
Last Updated : 05 Jan 2015 12:41 PM

மலிவு விலை சிமென்ட் விற்பனை தொடக்கம்: திட்டத்தின் முக்கிய அம்சங்களை வெளியிட்டது தமிழக அரசு

ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிமென்ட் விற்கப்படும் 'அம்மா சிமென்ட்' திட்டம் திங்கள்கிழமை திருச்சியில் தொடங்கப்பட்டது. இதனைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

'ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிமென்ட் வழங்கும் 'அம்மா சிமென்ட்' என்னும் திட்டம் 26.9.2014 அன்று அறிவிக்கப்பட்டது. மூட்டை ஒன்று 190 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும் 'அம்மா சிமென்ட்' திட்டம் இன்று (5.1.2015) திருச்சி மாவட்டத்தில் துவங்கப்பட்டது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான 5 கிட்டங்கிகளில் இந்த விற்பனை இன்று துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் படிப்படியாக விரிவு செய்யப்பட்டு 10.1.2015-க்குள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 470 கிட்டங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும்.

சிமென்ட் வாங்க வழிமுறைகள்:

* 'அம்மா சிமென்ட்' திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள தனியார் சிமென்ட் உற்பத்தியாளர்களிடமிருந்து மாதமொன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் கொள்முதல் செய்யப்படும்.

* சிமென்ட் மூட்டைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 470 கிட்டங்கிகளில் இருப்பு வைத்து, மூட்டை ஒன்றுக்கு 190/- ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

* இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோர்கள் 100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் வீதம் அதிக பட்சம் 1500 சதுர அடிக்கு 750 மூட்டைகள் வரை சலுகை விலையில் சிமென்ட் பெற்றுக் கொள்ளலாம்.

* இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கட்டடதிட்ட வரைபடத்தையோ அல்லது கிராம நிர்வாக அலுவலர் / வருவாய்த்துறை அலுவலர்/பஞ்சாயத்து யூனியன் மேற்பார்வையாளர் / பஞ்சாயத்து யூனியன் சாலை ஆய்வாளரின் சான்றிதழையோ பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

* வீடுகள் புதுப்பிக்க மற்றும் பழுது பார்க்க 10 முதல் 100 மூட்டைகள் வரை சிமென்ட் விற்பனை செய்யப்படும்.

* இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு சிமென்ட் நிறுவனம்ஒருங்கிணைப்பு முகமை Nodal Agency ஆக செயல்படும். இத்திட்டத்தைச்செயல்படுத்தும் முகவர்களாக தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படும்.

* இந்த சிமென்ட் தமிழ்நநாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 220 கிட்டங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 250 கிட்டங்கிகள் மூலம் விற்பனை செய்யப்படும்.

* ஊரக வளர்ச்சித் துறையின் கிட்டங்கிகளின் மூலமாக விற்பனைசெய்யப்படும் சிமென்ட்டை பெற்று வழங்கிட, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல / மண்டல மேலாளர் ஒருங்கிணைப்பு முகவராக செயல்படுவார். ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மாவட்டங்களில் செயல்படும் கிட்டங்கிகளின் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

* மேலும், மாவட்ட விநியோக மற்றும் விற்பனைச் சங்கங்களுக்கு (District Supply and Marketing Societies)சொந்தமான கடைகளின் மூலமாக அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 400 மூட்டைகள் இருப்பு வைத்து பொதுமக்களுக்கு சிமென்ட் விற்பனை செய்யப்படும். இதனை மாவட்ட ஆட்சித் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் மகளிர் சுய உதவிக் குழுவின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நடைமுறைப்படுத்தும்.

* பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் வீடுகள் கட்டுவோருக்கும் 'அம்மா சிமென்ட்' திட்டத்தின் கீழ் சிமென்ட் வழங்கப்படும்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x