Published : 07 Jan 2015 11:24 AM
Last Updated : 07 Jan 2015 11:24 AM

தமிழகத்தில் தனித்து இருக்கிறதா பாஜக?

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக விலகினால் பாதிப்பில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மத்தியில் பாஜக ஆட்சி மலர்ந்த பிறகு தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்துவோம் என்று தமிழக பாஜகவினர் உறுதியுடன் இருக்கும் நிலையில், தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக விலகுவதும், அதிமுகவுடனான உறவு என்னவென்பதை இன்னமும் தெளிவுபடுத்தாமல் இருப்பதும் மாநிலத்தில் பாஜக தனித்து இருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுகிறது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "கூட்டணி குறித்து பேசுவதற்கு இது சரியான நேரமில்லை. அதற்கு இன்னும் காலம் உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை பொறுத்தவரை யாரும் கூட்டணியைவிட்டு வெளியேறக் கூடாது என்பதுதான் எனது எண்ணம். கூட்டணி என்பது நீண்ட கால நன்மையை கருதி செயல்படுவது. அது ஒருவழிப் பாதையாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. இதையும் மீறி தே.ஜ. கூட்டணியிலிருந்து பாமக விலகினாலும் எந்த பின்னடைவும் ஏற்படாது" என கூறியிருந்தார்.

அண்மையில் தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி அமையும் என கூறியிருந்தார். அதை மறுக்கும் வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் பாமக தலைமையிலேயே கூட்டணி அமையும் என சில தினங்களுக்கு முன்னர் கூறினார்.

இத்தகைய சூழலில், பொன்.ராதாகிருஷ்ணனின் கூட்டணி தொடர்பான கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கிடையில், தேமுதிகவும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை பாஜக தலைமையில் எதிர்கொள்ள தயாராக இல்லை என்றே கூறப்படுகிறது. மேலும், முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றே அக்கட்சி விரும்புகிறது.

இன்று கோவையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொண்டு பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால் ஏற்பட்டுள்ள சாதகம், பாதகம் என்ன? தொடர்ந்து அந்த கூட்டணியில் நீடிக்கலாமா? என்பது குறித்து விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலின்போது, பாமக, தேமுதிகவுடன் சுமுகமாக இருந்த நட்பு இப்போது இணக்கமாக இல்லை. பாமகவும், தேமுதிகவும் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லையே தவிர பாஜகவுடன் எதிரும் புதிருமாகவே இருக்கிறது.

பாஜகவுடன் எப்போதும் நெருக்கத்தில் இருப்பதாகவே கருதப்படும் அதிமுகவும்கூட பிரதமர் மோடி மீது விமர்சனங்களை அடுக்கி வருகிறது. அண்மையில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் வெளியான கட்டுரையில் பாஜகவின் இந்துதுவா கொள்கையை கடுமையாக விமர்சித்தும், மதச்சார்பற்ற அரசு நடத்துவதில் பிதமர் மோடி அதிமுகவை பின்பற்ற வேண்டும் எனவும் எழுதப்பட்டிருந்தது.

சுவாமியின் தலையீடு:

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் வாதாட தனக்கு அனுமதி வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தை அணுகியிருப்பது, அதிமுகவுடனான உறவில் மேலும் விரிசல் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

தற்போதைய சூழல் குறித்து பெயர் வெளியிட மறுத்த பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, "தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் இத்தகைய உறவுச் சிக்கல்கள் ஏற்படும் என முன்னரே எதிர்பார்க்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி நல்ல பலனைத் தந்தது.

காங்கிரஸ் மீதான எதிர்ப்பு அலைகள் பாஜகவுக்கு சாதகமாகியது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் முற்றிலும் மாறுபட்டது. இதற்கு வேறுபட்ட அரசியல் அணுகுமுறை தேவைப்படுகிறது. இப்போதைக்கு பாஜக அமைதியாக பொறுமையாக அனைத்தையும் கவனிக்கும். தேர்தல் நெருங்கும்போது எங்களுக்கு நிச்சயம் புதிய நட்புகள் கிடைக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x