Published : 08 Jan 2015 11:08 AM
Last Updated : 08 Jan 2015 11:08 AM

ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான துறை ரீதியான வழக்கை வாபஸ் பெறுவதாக வருமான வரித்துறை, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வழக்கை சமரசம் செய்து கொள்வதற்கான இறுதி உத்தரவை வருமான வரித்துறை பிறப்பித்துள்ளது.

மேலும், சம்பந்தப்பட்டவர்களால் அபராத தொகையை செலுத்தப்பட்டதால் வழக்கில் சமரசம் செய்து கொள்வதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி தட்சிணாமூர்த்தி இது தொடர்பான உத்தரவை பிற்பகல் 3 மணியளவில் பிறப்பிப்பித்தார். அப்போது அவர், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதான வழக்கில் சமரசம் செய்துகொள்ள வருமான வரித்துறை செய்திருக்கும் முடிவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு வழக்கை தள்ளுபடி செய்து வழக்கில் இருந்து இருவரையும் விடுவிக்கிறது என்றார்.

ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் பங்குதாரர்களாக இருந்த சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருமான வரி கணக்குகளை 1991-92 மற்றும் 1992-93ம் ஆண்டுகளில் தாக்கல் செய்யவில்லை.

1993-94ம் ஆண்டுக்கான ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் தனிப்பட்ட வருமான கணக்கையும் தாக்கல் செய்யவில்லை என்று கூறி இருவர் மீதும் வருமானவரித் துறையினர் 1996-ம் ஆண்டு எழும்பூர் பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாததற் கான அபராதத் தொகையை செலுத்தத் தயாராக இருப்பதாக வருமான வரித்துறையிடம் ஜெயலலிதா, சசிகலா தரப்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை, அபராதத்துடன் வரி செலுத்த ஜெயலலிதா, சசிகலாவுக்கு அனுமதி அளித்தது.

ஜெயலலிதா, சசிகலா சார்பில் கொடுக்கப்பட்ட சமரச மனுவை வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, சசி என்டர்பிரைசஸ் நிறுவனம் 1990 91ம் ஆண்டுக்கு ரூ.75 லட்சத்து 33 ஆயிரத்து 330-ம், 1992-93ம் ஆண்டுக்கு ரூ.65 லட்சத்து 67 ஆயிரத்து 872-ம் அபராதத்துடன் வருமான வரி கட்டணத்தை செலுத்திவிட்டது.

அதேபோல தனிப்பட்ட வருமான வரிக் கணக்காக ஜெயலலிதா ரூ.30 லட்சத்து 83 ஆயிரத்து 887-ம், சசிகலா ரூ.28 லட்சத்து 7 ஆயிரத்து 972-ம் செலுத்திவிட்டனர். ஆக மொத்தம் ஒரு கோடியே 99 லட்சத்து 93 ஆயிரத்து 61 ரூபாய் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், அபராத தொகையை செலுத்தப்பட்டதால் வழக்கில் சமரசம் செய்து கொள்வதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x