Published : 30 Jan 2015 03:11 PM
Last Updated : 30 Jan 2015 03:11 PM
ஆஸ்திரேலியா உலகின் மிகச்சிறிய கண்டமாகவும், உலகின் மிகப்பெரும் தீவாகவும் உள்ளது. பெரும் நிலப்பரப்பைக்கொண்ட இத்தீவு, இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் உள்ள சில சிறிய தீவுகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.
இங்கு ஆங்கிலம் தேசிய மொழியாக உள்ளது. பெரும்பான்மையோர் ஆஸ்திரேலிய ஆங்கிலம் பேசுகின்றனர். இது பிரித்தானிய ஆங்கில மொழியை ஒத்திருந்தாலும் ஆஸ்திரேலியருக்கென தனிப்பட்ட சில உச்சரிப்பையும், சொற் தொகுதியையும் கொண்டு விளங்குகிறது. இலக்கணமும் எழுத்துக்கூட்டலும் பிரித்தானியாவின் ஆங்கிலத்துடன் ஒத்தது. 2001-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 80 சதத்தினரின் வீட்டில் பேசும் மொழி ஆங்கிலம் ஆகும். அதற்கு அடுத்தபடியாக சீனம் (2.1%), இத்தாலியம் (1.9%), கிரேக்கம் (1.4%). மற்றும் தமிழ் (1%) என பிற மொழி பேசுவோரின் எண்ணிக்கை அமைந்துள்ளது. இங்கு குடியேறியோரின் பெரும்பான்மையோர் இரு மொழி பேசுபவர்களாக உள்ளனர்.
மேல்நிலைக் கல்விவரை தமிழ் ஐரோப்பியர்கள் இங்கு குடியேறிய காலத்தில் கிட்டத்தட்ட 200 அல்லது 300 மொழிகள் பேசும் பழங்குடியினர் வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவற்றில் 70 பழங்குடியினர் மட்டுமே வசிக்கின்றனர்.
தமிழ்பேசும் மக்கள் ஆங்காங்கே பிரிந்து வாழ்ந்தபோதிலும் நியூசௌத்வேல்ஸ் மாநிலத்தில் அதிக அளவில் வாழ்கின்றனர். எனினும் இங்குள்ள பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி அளவில் மட்டுமே தமிழ்வழிக் கல்வி வழங்கப்படுகிறது.
புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகள் தமிழ் வழியில் உயர்கல்வி படிக்க இங்குள்ள எந்த ஒரு பல்கலைக்கழகத்திலும் தமிழ் துறை (இருக்கை) இல்லை. அதனால், புலம்பெயர்ந்த தமிழர் சந்ததியினரிடையே தமிழ்மொழி மெல்ல மறைந்து வருகிறது. தமிழ் ஆசிரியர்கள் மாநாடு இந்நிலையில் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சௌத்வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகளின் கூட்டமைப்பு சார்பில் ஆஸ்திரேலியத் தமிழ் ஆசிரியர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்களில் தமிழ் துறைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளில் தமிழ் ஆசிரியர்கள் அரசிடம் வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநாட்டில் கலந்துகொண்ட திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழக தமிழ் துறை உதவி பேராசிரியர் சி.சிதம்பரம் `தி இந்து’விடம் கூறியது: மாநாட்டில் மேற்கு சிட்னி பல்கலைக்கழகக் கல்வியல் துறை இணைப்பேராசிரியர் கென் குயிக்சாங் பேசும்போது, தமிழ்மொழி நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. காலத்தால் அழியாத சிறப்பைக் கொண்டு திகழ்கிறது. ஆனால் இங்குள்ள எந்த ஒரு பல்கலைக்ககழகமும் தமிழ்மொழியை கற்பிப்பதில்லை என வருத்தப்பட்டார்.
அவரது பேச்சு, அங்குள்ள தமிழ் மக்களிடையே சிட்னியில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்கான இருக்கை (துறையை) அமைக்கவேண்டும் என்ற முயற்சி வலுப்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழுக்கான துறை அமைப்பது பெரிய விஷயமல்ல.
தமிழ் துறை அமைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்புத்தொகையாக செலுத்தும்பட்சத்தில் இந்தியாவில் உள்ள மத்திய, மாநில அரசுகளும் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக சிட்னி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான
ஆய்வு இருக்கை ஒன்றை ஏற்படுத்தும் முயற்சி கைகூடும். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான துறை அமையும் பட்சத்தில் மற்ற பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த் துறைகளை ஏற்படுத்த முடியும்.
இதற்கான முயற்சிகளை ஏற்கெனவே மேற்கொண்டுவரும் வேளையில் சிட்னி பல்கலைக்கழக கல்வியியல் துறை இணைப்பேராசிரியரின் கருத்து அங்குள்ள தமிழ் மக்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் ஆய்வுத் துறை அமைக்க முயற்சி தற்போது அதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படுகிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதன்மைத் திட்டங்களில் ஒன்று தமிழர் வாழும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்வு இருக்கைகளை உருவாக்குவதாகும்.
தமிழ் மொழிக்காக மத்திய அமைச்சர் தருண் விஜய் குரல் கொடுத்துவரும் இவ்வேளையில் செம்மொழி நிறுவனம், மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் ஆய்வுத் துறைகளை அமைத்து தமிழ்மொழியை வளர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT