Published : 18 Jan 2015 11:41 AM
Last Updated : 18 Jan 2015 11:41 AM

அரசு மருத்துவமனைகள் லாபநோக்கில் செயல்படுவதா? - தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்

பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவம் அளிக்க வேண்டிய அரசு மருத்துவமனைகள், லாபநோக்குடன் செயல்படக் கூடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சமீபகாலமாக அரசு மருத்துவமனைகளின் அலட்சியப் போக்கு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. சரியான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காததால் தருமபுரியில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளங் குழந்தைகள் இறந்தன. ஊட்டி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்கள் இறந்தனர். தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 2 குழந்தைகள் இறந்துள்ளன என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கான சேவையை பாரபட்சமின்றி செய்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

காப்பீடு அட்டை இல்லாதவர்களுக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தாமதமாவதாக செய்திகள் வந்துள்ளன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு மருத்துவமனைகள் லாபநோக்கில் செயல்படுமானால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். காப்பீடு இருந்தால் மட்டுமே அறுவைச் சிகிச்சை கருவிகள் விரைவில் வாங்க முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது.

அவசர சிகிச்சைகளுக்குரிய உபகரணங்களை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டியது அரசின் கடமை. காப்பீடு இல்லாத மக்கள் அலைக்கழிக்கப்படுவதையும், அறுவை சிகிச்சை தாமதப்படுவதையும் தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் தமிழிசை கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x