Published : 02 Jan 2015 10:36 AM
Last Updated : 02 Jan 2015 10:36 AM
2014ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட 3.83 லட்சம் பாஸ்போர்ட்களை விட கூடுதலாக 7 ஆயிரம் பாஸ்போர்ட்கள் அதாவது, 3.90 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கி சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து, சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சி.செந்தில்பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பொதுமக்களுக்கு விரைவாக பாஸ்போர்ட் வழங்குவதற்காக, மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, கடந்த 2011ம் ஆண்டு சென்னையில் சாலிகிராமம், அமைந்தகரை மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதையடுத்து, கடந்த 2012ம் ஆண்டில் சென்னை மண்டலத்தில் 3.17 லட்சம் பாஸ்போர்ட்களும், 2013ம் ஆண்டில் 3.67 லட்சம் பாஸ்போர்ட்களும் வழங்கப்பட்டன.
2014ம் ஆண்டில் 3.83 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை விட கூடுதலாக 7 ஆயிரம் பாஸ்போர்ட்கள் அதாவது, 3.90 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டு இதை சாதித்துள்ளோம்.
மேலும், கடந்த 2011ம் ஆண்டு முதல் இதுவரை சென்னை மண்டலத்தில் மொத்தம் 11.69 லட்சம் பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பாஸ்போர்ட் சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெற நாள் ஒன்றுக்கு 1,850 பேருக்கு நேர்காணல் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 2,730 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சாலிகிராமத்தில் உள்ள சேவை மையங்களில் பொதுமக்களின் வசதிக்காக நூலக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மூன்று மையங்களிலும் வெப் காமிரா மூலம் கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தரகர்களின் தொல்லை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் வசதிக்காக தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் 1,045 பொது சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அங்கு சென்று ரூ.100 கட்டணம் செலுத்தி பாஸ்போர்ட் பெறுவதற்கான முன்பதிவு செய்யலாம்.
இ-பாஸ்பாபோர்ட் சேவை வசதியும் விரைவில் தொடங்கப் பட உள்ளது. அதேபோல், பத்திரி கையாளர்கள், வழக்கறிஞர்களுக் கான சிறப்பு பாஸ்போர்ட் மேளாவும் விரைவில் நடத்தப்பட உள்ளது. பாண்டிச்சேரியில் சிறிய பாஸ்போர்ட் சேவை மையத்தை ஏற்படுத்த, புதுவை அரசு இடம் வழங்கியுள்ளது. இரண்டு மாதத்திற்குள் அங்கு புதிய சேவை மையம் தொடங்கப்படும்.
சென்னையில் பாஸ்போர்ட் பெறுவதற்கான காவல்துறை விசாரணை காலம் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சாதாரணமுறையில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர் களுக்கு 15 நாட்களுக்குள் பாஸ் போர்ட் வழங்கப்படுகிறது. தட்கல் முறையில் விண்ணப்பிப்பவர் களுக்கு 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படுகிறது.
போலி பாஸ்போர்ட்களை ஒழிப்பதற்காக, விண்ணப்பதாரரின் நிழல் படத்தை பாஸ்போர்ட்டில் பிரிண்ட் செய்து வழங்கும் புதிய தொழில்நுட்பமும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சி.செந்தில் பாண்டியன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT