Last Updated : 07 Jan, 2015 10:02 AM

 

Published : 07 Jan 2015 10:02 AM
Last Updated : 07 Jan 2015 10:02 AM

மாநிலத்திலேயே அதிக வழக்குகள் பதிவு: மனைவியை கொடுமைப்படுத்துவதில் மதுரைக்கு முதலிடம் - நீலகிரி மாவட்டத்துக்கு பட்டியலில் கடைசி இடம்

கணவர்களால் பெண்கள் கொடுமைக்கு ஆளாவது தொடர்பான வழக்குகள் மாநிலத்திலேயே மதுரையில்தான் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியலில் நீலகிரி மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

பொது இடங்களில் சீண்டல்கள், பாலியல் தொந்தரவுகள், தாக்குதல்கள், ஆசிட் வீச்சுகள் என பெண்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய குடும்பத்தினரும்கூட பல நேரங்களில் பெண்களை கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக வரதட்சணை பிரச்சினை, குடிகார கணவரின் தாக்குதல்கள், மாமனார், மாமியார் மற்றும் நாத்தனாரின் கொடுமைகள் போன்றவற்றால் பெண்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சட்ட ரீதியான தீர்வு கிடைப்பதற்காக மாநிலம் முழுவதும் மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் அங்கு அளிக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்வதில்லை எனவும், காவல்துறையினரே பஞ்சாயத்து பேசுவதாகவும் பரவலான குற்றச்சாட்டு உண்டு. இப்படிப்பட்ட நிலையிலும்கூட, கடந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை தமிழகத்தில், பெண்கள் தனது கணவராலோ அல்லது அவர்களது உறவினர்களாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக 1932 வழக்குகள் தமிழக காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில குற்றப் பதிவேடுகளின்படி இந்த புள்ளிவிவரங்கள் தெரியவந்துள்ளன.

இதில் அதிகபட்சமாக மதுரை மாவட்ட காவல்துறையினர் 291 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் 128, வேலூரில் 107, திண்டுக்கல்லில் 105, விழுப்புரத்தில் 76, தூத்துக்குடியில் 68, மதுரை மாநகரில் 61, கோவை மாநகரில் 59 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோல், மிக குறைவாக நீலகிரி மாவட்டத்தில் 5 வழக்குகளும், திருவாரூரில் 6, அரியலூரில் 7, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தலா 9 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இப்பட்டியலில் மதுரை மாவட்டம் முதலிடத்தில் இருப்பது பற்றி எஸ்.பி. விஜயேந்திரபிதாரியிடம் கேட்டபோது, ‘அனைத்து புகார்களும் பெண்களால் வேண்டுமென்றே தரப்படுவதில்லை. வீட்டில் ஏதோ ஒரு வகையில் பிரச்சினை இருப்பதால்தான் காவல்நிலையங்களைத் தேடி வருகின்றனர். எனவே உடனே வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதன்மூலம் பெண்களிடம் காவல்துறை மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நிவாரணமும் கிடைக்கும். அதேசமயம் தவறு செய்திருந்தால் கணவர் குடும்பத்தினருக்கு பயமும் ஏற்படும். மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மாமனார், மாமியார் கொடுமைகள் குறித்த புகார் அதிகளவில் உள்ளன. கணவர் இறந்தபின் சொத்து கொடுக்க மறுப்பது, வீட்டைவிட்டு வெளியே அனுப்புவதாகவும் புகார்கள் வருகின்றன. சில கணவர்கள் குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பது, மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மனைவியை விரட்டுவது, நடத்தையில் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்துவது போன்ற புகார்களும் அதிகளவில் வருகின்றன என்றார்.

எஸ்.சி, எஸ்.டி. வழக்கிலும் முதலிடம்

இதே காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1159 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக 168 வழக்குகளை பதிவு செய்து மதுரை மாவட்ட காவல்துறை முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் 109, சிவகங்கையில் 63, திருவண்ணாமலையில் 57, புதுக்கோட்டையில் 51, கடலூரில் 49, தேனி மற்றும் வேலூரில் தலா 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீலகிரி, திருப்பூர், திருச்சி மாநகரம் ஆகிய இடங்களில் மிகக்குறைவாக 4 வழக்குகளே பதிவாகியுள் ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x