Published : 18 Jan 2015 11:08 AM
Last Updated : 18 Jan 2015 11:08 AM

தீவுத்திடல் பொருட்காட்சிக்கு ஒரு லட்சம் பேர் வருகை

காணும் பொங்கல் நாளான நேற்று சென்னை தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சியை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 41-வது சுற்றுலா பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் நடந்துவருகிறது. இதில் தமிழக அரசுத் துறை அரங்குகள், தனியார் அரங்குகள் உட்பட 229 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவுக் கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.20 வசூலிக் கப்படுகிறது.

இந்த ஆண்டு பொருட்காட்சியின் முக்கிய அம்சமாக தனியார் நிறுவனம் சார்பில் மாதிரி அமர்நாத் பனிலிங்கம் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்க்க ரூ.50 கட்டணம்.

நேற்று காணும் பொங்கல் என்பதால் மொத்தம் 32 டிக்கெட் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொருட்காட்சிக்கு காலை முதலே மக்கள் வரத்தொடங்கினர். கூட்ட நெரிசலில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க ஏராளமான போலீஸார், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மருத்துவ உதவிக்காக ‘108’ ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

பொருட்காட்சியில் உள்ள அரசுத் துறை விழிப்புணர்வு அரங்குகள் மூலம் நலத்திட்ட உதவிகள், அரசுத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொண்டனர். பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல அரங்குகள் உள்ளன. அசுர தாலாட்டு, ராட்டினம், மினி ரயில் உள்ளிட்டவற்றில் சிறியவர்களும் பெரிய வர்களும் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

அருங்காட்சியகத்தில் குவிந்த கூட்டம்

காணும் பொங்கலையொட்டி ஏராளமானோர் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தை கண்டு ரசித்தனர். நேற்று காலை முதல் அருங்காட்சியகத்துக்கு மக்கள் வரத் தொடங்கினர்.

அங்குள்ள பழங்கால நாணயங்கள் அரங்கு, விலங்கியல் துறையில் உள்ள பதப்படுத்தப்பட்டுள்ள மீன்கள், விலங்குகள், செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள ரோபோ டைனோசர் செயல்பாடு, பீரங்கிகள், பழங்கால சிலைகள், தொழில்வளர்ச்சி குறித்த கண்காட்சி ஆகியவற்றை கண்டு ரசித்தனர். அருங்காட்சியகத்துக்கு சுமார் ஆயிரம் பேர் வந்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x