Last Updated : 18 Feb, 2014 12:00 AM

 

Published : 18 Feb 2014 12:00 AM
Last Updated : 18 Feb 2014 12:00 AM

நாமக்கல் தொகுதியில் களமிறங்கும் திமுக - அதிமுக

நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சி வேட்பாளர்களே களம் இறக்கப்பட உள்ளனர். அதில், திமுக சார்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான செ.காந்திச்செல்வன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், திருச்செங்கோடு என, இரு நாடாளுமன்ற தொகுதிகள் இருந்தன. இரு தொகுதிகளும் கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் நடந்த தொகுதி மறு சீரமைப்பில் நீக்கம் செய்யப்பட்டது. புதிதாக நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது.

இத்தொகுதி, நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், திருச்செங்கோடு, ப.வேலுார் மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. புதிதாக உருவான நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக, திமுகவும் நேரடியாக களம் இறங்கின.

அதிமுக சார்பில் மகளிரணி நிர்வாகி வைரம் தமிழரசி மற்றும் திமுக கூட்டணி சார்பில், திமுக மாவட்டச் செயலாளரான செ.காந்திச்செல்வனும் களம் இறக்கப்பட்டனர். அதில் திமுக வேட்பாளர் காந்திச்செல்வன் வெற்றி பெற்றதுடன், மத்திய இணையமைச்சர் பதவியும் பெற்றார். அந்த வகையில் புதிதாக உருவான நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியை முதலில் கைப்பற்றிய பெருமை திமுகவுக்கு கிடைத்தது.

வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சியினர் நேரடி, மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி எவ்வாறு அமைந்தாலும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக வசம் உள்ளதால், இத்தொகுதியில் மீண்டும் திமுக களம் இறங்கும். குறிப்பாக தற்போதைய நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான செ.காந்திச்செல்வன் திமுக சார்பில் களம் இறக்கப்படுவார் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

அதேவேளையில் அதிமுக தரப்பில் அக்கட்சியின் 2009 தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளரே நாமக்கல் தொகுதியில் களம் இறக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. தவிர, வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் அதிமுக தரப்பில் நடைபெற்று வருகிறது எனவும், அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் வர உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், நாமக்கல் தொகுதியில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சி வேட்பாளர்களே போட்டியிட உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x