Published : 29 Jan 2015 05:10 PM
Last Updated : 29 Jan 2015 05:10 PM
கனடாவை சேர்ந்த தம்பதியர் தங்களது முன்னோர் வாழ்ந்து மறைந்த பூமியை காண சேலம் வந்தனர். தங்களது முன்னோர்களின் சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியும், தந்தை வாழ்ந்த பங்களாவைக் கண்டுகளித்து, மாணவ, மாணவியருடன் உரையாடினர்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் டெனால்டு காலின்ஸ். இவர் கடந்த 1948ம் ஆண்டு சேலம் சிஎஸ்ஐ சர்ச்சில் மதபோதகராக பணியாற்றினார். இவர் கடந்த 1973ம் ஆண்டு வரை மதபோதகராக பணியில் இருந்து, ஓய்வு பெற்ற பின் தாய் நாடான இங்கிலாந்துக்கு திரும்பினார். இவரது மகன் ஆலன்காலின்ஸிடம், இந்தியாவில் பணியாற்றியது குறித்தும், அவர்களின் முன்னோர்களும், முன்னோடிகளும் சேலத்தில் வாழ்ந்து மறைந்த வரலாற்றை நினைவு கூறியுள்ளார்.
கடந்த 1992ம் ஆண்டு டொனால்டு காலின்ஸ் இங்கிலாந்தில் மறைந்தார். அவரது மகன் ஆலன்காலின்ஸ், மனைவி வயலெட் ஆகியோர் குடும்பத்துடன் கனடாவில் குடியேறி வசித்து வருகின்றனர். ஆலன்காலின்ஸ் குறும்பட இயக்குநராக உள்ளார். தந்தை மறைந்த பின், அவர் முன்னோர்கள் குறித்து கூறியதும், அவர்கள் வாழ்ந்த பூமியை காணும் ஆவல் ஏற்பட்டது.
இதையடுத்து, ஆலன்காலின்ஸ் (72) அவரது மனைவி வயலெட் (71) ஆகியோர் கனடாவில் இருந்து சேலம் வந்தனர். சேலம் சிஎஸ்ஐ சர்ச்சில் டொனால் காலின்ஸ் பணியாற்றியதும், சிஎஸ்ஐ பாலிடெக்னிக்கில் அவர் தங்கியிருந்த பங்களாவை கண்டு வியந்தனர். சிஎஸ்ஐ பாலிடெக்னிக்கில் இன்றும் காலின்ஸ் பிளாக் என்ற கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தந்தை வாழ்ந்த இடத்தை கண்டு மகிழ்ந்த அவர்கள், ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கல்லறை தோட்டத்துக்கு சென்றனர்.
அவர்களின் முன்னோர்களான மதபோதர்கள் ஹென்றி கிறிஸ்து, ஜார்ஜ் வால்டன் ஆகியோர் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னோர்களை நினைவு கூர்ந்திடவும், அவர்கள் வாழ்ந்து மறைந்த தேசத்தையும், தந்தை பணியாற்றிய இடங்களை கண்டு கனடா தம்பதியர் வெகுவாக பரவசப்பட்டனர்.
சிஎஸ்ஐ பாலிடெக்னிக்கில் டொனால்டு காலின்ஸ் வாழ்ந்த பங்களாவுக்கு அவர் பெயரிலேயே வழங்கப்பட்டு வருகிறது.
அந்த பங்களாவுக்கு காலின்ஸ் பங்களா என்ற கல்வெட்டை வைக்க வேண்டும் என்று ஆலன் காலின்ஸிடம், சேலம் வரலாற்று சங்க பொதுச் செயலாளர் பர்னபாஸ் மற்றும் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 165 ஆண்டு பழமையான காலின்ஸ் பங்களா இன்றளவும் சிறிய விரிசலின்றி அழகுற காட்சியளிப்பதை, கண்டு வெளிநாட்டினர் வியந்து செல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT