Published : 09 Apr 2014 06:47 PM
Last Updated : 09 Apr 2014 06:47 PM
மக்களவைத் தேர்தலுக்குப் பின்னரே மீனவர்களின் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெறும் என மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கடந்த ஜனவரி 27-ம் தேதி அன்று சென்னை மீன்வளத் துறை இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக மற்றும் இலங்கை மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை இரு நாட்டு உயர் அதிகாரிகள், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் செயற்கையாக வரையறுக்கப்பட்ட எல்லை பாரபட்சமின்றி இருதரப்பும் பரஸ்பர நல்லிணக்கத்துடன் மீன்பிடிப்பதற்கான உரிமையை வலியுறுத்துதல், முந்தைய இந்திய - இலங்கை கலந்தாய்வின் போது ஏற்றுக்கொண்டபடி, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுந்தாக்குதல்கள், சிறைப்பிடிப்பு, நீண்டகால சிறைவாசம், மீன்பிடிப் படகுகள், உபகரணங்களை பறிமுதல் செய்தல், முடக்குதல் போன்ற நடவடிக்கைகளை கைவிடுதல் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை மார்ச் 13-ம் தேதி கொழும்பில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 172 மீனவர்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து மார்ச் 25ம் தேதி இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் மேலும் 74 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். மீனவர்களை விடுதலை செய்தால் மட்டுமே திட்டமிட்டபடி கொழும்பில் 25-ம் தேதி இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெறும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனால் இரண்டாவது முறையாக கொழும்பில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை தள்ளிப்போனது.
மீனவர் பேச்சுவார்த்தை குறித்து நமது செய்தியாளரிடம் மீனவப் பிரதிநிதிகள் கூறும்போது, "தமிழக மீனவர்களை இலங்கை விடுவிக்க தாமதப்படுத்தியதால் கொழும்பில் நடைபெற வேண்டிய மீனவப் பேச்சுவார்த்தை இரண்டு முறை தள்ளிப்போனது.
தற்போது நம் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டு ஏப்ரல் 15 முதல் மே 29 வரை 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகளைக் கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தேர்தல் முடிந்து பேச்சவார்த்தை நடைபெறும்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT