Published : 16 Jan 2015 05:49 PM
Last Updated : 16 Jan 2015 05:49 PM
ஸ்ரீரங்கம் தொகுதி சட்டப் பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆனந்துக்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த 9-1-2015 நடைபெற்ற திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தில் குறிப்பிட்டவாறு, 2011ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு அமைந்த நாள் முதல் தேர்தல் நேரத்தில் அக்கட்சி வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்து விட்டு, ஜனநாயக விரோத, மக்கள் விரோத ஆட்சியினை நடத்தி வருகிறது.
அதன் உச்சமாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது பற்றி தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட பின் ஏற்பட்ட அரசியல் மற்றும் நிர்வாக மாற்றத்திற்குப் பிறகு, ஆட்சி நிர்வாகம் முற்றிலுமாக நிலைகுலைந்தது மட்டுமின்றி, மாநில உரிமைகளும், மக்கள் பிரச்சினைகளும் கேட்பாரற்றுப் போனதோடு ஒரு அரசு ஆட்சிப் பொறுப்பில் இருப்பதாகவே எண்ண முடியாத அளவுக்கு நிர்வாகச் சீரழிவு ஏற்பட்டுள்ளதை தமிழக மக்கள் உணர்வார்கள்.
அதிலும் குறிப்பாக நீதி மன்றத் தண்டனையால் பதவி இழந்த ஜெயலலிதாவின் பினாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியில் எவ்வித கொள்கை முடிவுகளோ, தொலை நோக்குத் திட்டங்களோ வகுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இரட்டை நிர்வாகம்
முதலமைச்சர், தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர் ஆகிய பதவிகளில் இரட்டை நிர்வாகம் நடை பெறுகின்ற அளவுக்கு, குளறுபடிகள் ஏற்பட்டு, தமிழகத்தின் உரிமைகள், மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் சட்டம், ஒழுங்கு உள்ளிட்டப் பிரச்சினைகள் குறித்து ஆரோக்கியமான விவாதங்களோ, முடிவுகளோ எடுக்கப்படாமல் அரசு இயந்திரம் முற்றிலுமாக செயலற்றுப் போய் விட்ட நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
இப்பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் விரிவாக விவாதிக்கும்பொருட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், இதர அரசியல் கட்சிகளின் சார்பிலும் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மறுக்கப்பட்டதோடு, சட்டமன்றத்தை அவசர அவசரமாக மூன்று நாள்கள்மட்டுமே நடத்தி முடித்து, ஜனநாயக நெறிமுறைகளையும், சட்டமன்ற மரபுகளையும் கேலிக்குரியதாக்கியுள்ளது ஜெயலலிதாவின் பினாமி அரசு.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் பிரச்சினை, முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்துவது பற்றிய பிரச்சினை, அமராவதி பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பிரச்சினை, தொடரும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது போன்ற மாநில உரிமைகள் குறித்த பிரச்சினைகள், வரலாறு காணாத தொடர் மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருள்களின் கடும் விலைவாசி உயர்வு, மாநிலத்தில் பரவி வரும் டெங்கு, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகள், தமிழகம் முழுவதும் நிலவி வரும் யூரியா தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு; கொலைக்களமாகி வரும் கல்விக் கூடங்கள்; நாள்தோறும் தொடரும் கொலைகள் மற்றும் கொள்ளைகள், முதியோர் உதவித் தொகை ரத்து, பச்சைத் தேயிலைக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள்; சத்துணவு முட்டைகள் வாங்கியதில் ஊழல்; ஆவின் பால் விற்பனையில் ஊழல்; கிரானைட் முறைகேடு, ஊழல்; தாது மணல் கொள்ளை, ஊழல் உள்ளிட்ட ஊழல் முறைகேடுகளிலும் ஜெயலலிதாவின் பினாமி அரசு எவ்வித விசாரணையையும், தீர்வையும் மேற்கொள்ளாமலும், மாநில உரிமைகளை வலியுறுத்திப் பாதுகாக்காமலும், மக்கள் பிரச்சினைகளுக்குரிய நடவடிக்கைகள் எடுக்காமலும் இருந்து வருகிறது.
அத்துடன், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்களால் கண்டறிந்து எழுப்பப்படும் ஊழல் முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமலும், முற்றிலுமாக முடங்கிக் கிடப்பதோடு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் - அவர்களை இயக்குகிறவர்களுக்கும் நலன் பயக்கும் காரியங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.
இத்தகைய மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஆட்சியின் அலங்கோலங்களை தமிழக மக்களுக்கு உணர்த்திடும் வகையில், வருகிற 13-2-2015 அன்று நடைபெறவுள்ள ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதென முடிவெடுத்து, கடந்த முறை அந்தத் தொகுதியில் போட்டியிட்ட அதே வேட்பாளரையே கழக வேட்பாளராக அறிவித்திருக்கிறோம்.
ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தொடர்ந்து தமிழகத்தில் நடத்தி வரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை செய்கின்ற வகையில், இந்த இடைத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நல்கிடும் உறுதியான ஆதரவோடு போட்டியிடுவது ஆக்க பூர்வமானதென்று நினைத்து இந்த முடிவினை எடுத்துள்ளோம்.
தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காத்திடவும், சர்வாதிகார எண்ணத்தை வீழ்த்திடவும் மேற்கொள்ளப்பட்டுள்ள கழகத்தின் இந்த முடிவிற்கு உதவிடும் வகையில், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டப் பேரவை இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் ஆனந்துக்கு தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும்" என கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT