Published : 11 Jan 2015 10:23 AM
Last Updated : 11 Jan 2015 10:23 AM

திமுக-வில் கட்டுக்கோப்பு இல்லை: இல.கணேசன் சாடல்

“திமுக பலவீனமான கட்சியாக மாறி விட்டது. கட்சியை கட்டுக்கோப்பாக திமுக தலைவர் கருணாநிதியால் வைத்துக்கொள்ள முடியவில்லை” என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி, தொலை நோக்கு பார்வையுடன் திட்டங்களை கொண்டு வருகிறார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் மன்மோகன் சிங், ‘விவசாய தொழில் செய்தால் நஷ்டம் எனவும், அவர்களது வாரிசுகள் வேறு தொழில் செய்ய வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டார்.

பிரதமர் மோடி விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடிய தொழில் நுட்பங்களை சொன்னதுடன் அதற்கான திட்டங்களை அறிவித்தார். நாட்டில் இறக்குமதியை குறைத்து, அன்னிய மூதலீட்டை கொண்டு உற்பத்தியை அதிகரிக்க திட்டம் தீட்டினார்.

எல்லோருக்கும் வேலை வாய்ப்பு என்ற தொலை நோக்கு திட்டத்தால் நாட்டில் பொருளாதாரம் உயரும், நாடும் வல்லரசாக மாறும். காங்கிரஸ் ஆட்சியில் 300-க்கும் மேற்பட்ட திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்தனர். அதன்பின்னர் அந்த திட்டங்களை நிறைவேற்வில்லை. மோடி பழைய திட்டங்களை அமல்படுத்தி பிரதானமாக எடுத்து கொண்டு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் வரும் 2016-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலை கருத்தில்கொண்டு அதிமுக அரசு, அம்மா சிமென்ட் அறிமுகப்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 18 ஆண்டுக்கு முன்பு செய்த ஊழலில் தற்போது 4 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார். தற்போது ஜாமீனில் இருந்து வருகிறார். கடந்த 100 நாட்களாக மாற்று முதல்வர் இருந்த போதும் தமிழகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள கட்சிகள். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி செய்த காலத்தில் ஊழல் இல்லை. இதேபோல் தற்போதும் மோடி அரசிலும் ஊழல் இல்லை.

திமுக பலவீனமான கட்சியாக மாறி விட்டது. கட்சியை கட்டுக்கோப்பாக திமுக தலைவர் கருணாநிதியால் வைத்துக்கொள்ள முடியவில்லை. திமுக கொள்கை என்பது பிரிவினைவாதம், நாத்திகவாதம். இந்த கொள்கை இனி மக்களிடம் எடுபடாது. பிரதமர் மோடியின் திட்டங்களால் தமிழ மக்கள் பாஜகவை ஆதரித்து வருகின்றனர். தமிழக மக்களின் ஆதரவு காற்றாக, தென்றலாக, புயலாக மாறி இப்போது சுனாமியாக மாறி விட்டது என்றார் இல.கணேசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x