Published : 17 Jan 2015 08:51 AM
Last Updated : 17 Jan 2015 08:51 AM
இணையதளத்தில் ஆம்னி பஸ் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு அறிவித்தபடி சேவை கிடைக்காததால் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் ரயில்களில் டிக்கெட் கிடைக்காததால், பெரும்பாலான மக்கள் ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். இதற்கான டிக்கெட்களை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளும் வசதியை ஆம்னி பஸ் நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ளன. இந்த வகையில் டிக்கெட் எடுப்பது எளிதாக இருப்பதால் பொதுமக்களும் இதை விரும்புகிறார்கள்.
அதே நேரத்தில் சில ஆம்னி பஸ் நிறுவனங்கள் இணையதளத்தில் கொடுக்கும் உறுதிமொழிகளை சரியாக கடைபிடிப்பதில்லை. பஸ் கட்டணத்தை திடீரென்று உயர்த்துவது, குறிப்பிட்ட நேரத்தில் பஸ்களை இயக்காமல் இருப்பது என்று அவை பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். குறிப்பாக பொங்கலுக்கு முன்தினம் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக மாலை 6 மணிக்கு வரவேண்டிய பஸ், நள்ளிரவு 2.30 மணி வரை வரவில்லை. இதையடுத்து, அரசு விரைவு பஸ் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதுபற்றி ஆம்னி பஸ்ஸில் பயணம் செய்த ஆர்.முத்துலட்சுமி கூறும்போது, “நான் கடந்த கடந்த மாதம் சென்னையில் இருந்து கோவில்பட்டி சென்றேன். கோவில்பட்டி டவுனில் உள்ள பழைய பஸ் நிலையத்தில் இறக்கி விடுவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார்கள். ஆனால், கோவில்பட்டி வந்ததும் பஸ் உள்ளே செல்லாது என்று கூறி ஊருக்கு வெளியே அதிகாலை 3.30 மணிக்கு இறக்கிவிட்டு சென்றனர். இதனால் நான் மிகவும் அவதிப்பட்டேன்” என்கிறார்.
சந்திரசேகரன், செங்கல்வராயன் ஆகியோர் கூறும்போது, “ஆன்லைனில் நாங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது காண்பிக்கப்படும் பஸ், பயணம் செய்யும் போது வருவதில்லை’’ என்றனர்.
இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பயணிகளை குறிப்பிட்ட இடத்தில் இறக்காமல் புறநகர் பகுதியில் இறக்கி விடுவது ஆகியவை குறித்து 044 - 24794709 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். பயணிகளின் புகார் உண்மை என்று உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆம்னி பஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT