Published : 14 Jan 2015 03:23 PM
Last Updated : 14 Jan 2015 03:23 PM
இந்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி 1685 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, காவல் துறையில் காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலைகளில் 1500 பணியாளர்களுக்கு "தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்" வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர், ஓட்டுநர் தீயணைப்போர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைத் துறையில் முதல்நிலை வார்டர்கள் 60 பேர்களுக்கும் ‘தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்’ வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு ரூ. 200/- மாதாந்நிர பதக்கப்படியாக வழங்கப்படும் . இவர்கள் அனைவருக்கும் காவல் துறை தலைவர், இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, மற்றும் சிறைத்துறை தலைவர் அவர்களால் மாவட்டத் தலைநகரங்களில் பின்னர் நடைபெறவுள்ள அரசு விழாக்களில் பதக்கங்கள் வழங்கப்படும்.
மேலும், காவல் வானொலி பிரிவில் பணியாற்றும் 2 அதிகாரிகள், 1 காவல் புகைப்படக் கலைஞர் மற்றும் நாய் படைப் பிரிவில் பணியாற்றும் 2 அதிகாரிகள் ஆக மொத்தம் 5 அதிகாரிகளுக்கு அவர்களது தொழிற்சிறப்பு மற்றும் மாசற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் தமிழக ‘முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்கப்படுகிறது.
இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகளுக்கு, ரொக்க தொகையாக காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலையில் ரூபாய் 3 ஆயிரமும், சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் நிலையில் ரூபாய் 4 ஆயிரமும் மற்றும் துணைக்காவல் கண்காணிப்பாளர் நிலையில் ரூபாய் 6 ஆயிரமும் வழங்கப்படும். இதற்கென நடைபெறவுள்ள சிறப்பு விழாவில் மேற்படி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதலமைச்சரால் பதக்கங்கள் வழங்கப்படும்.
மேலும், தக்கோலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிய கோவிந்தராஜ் கனகராஜ் அவர்கள் 20.07.2014 அன்று பணியில் இருந்த போது, உரியூர் குப்பம் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றுபடுகையில், கள்ளத்தனமாக மணல் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட, சமூக விரோத சக்தியான சுரேஷ் என்பவரை பிடிக்கும் முயற்சியில் எவ்வித சுணக்கமும் இன்றி தனது இன்னுயிரை நீத்தார், எனவே மறைந்த தலைமை காவலர் 2262, கோவிந்தராஜ் கனகராஜ் அவர்களின் தன்னலம் கருதாத கடமையுணர்ச்சி மிகுந்த சேவையை கருதி காவல் துறைக்கான தமிழக முதலமைச்சரின் வீர தீர செயலுக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வீர தீர செயலுக்கான பரிசு தொகை ரூ.5 லட்சமும் அன்னாரின் வாரிசுதாரருக்கு வழங்கப்படும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT