Published : 23 Jan 2015 09:28 AM
Last Updated : 23 Jan 2015 09:28 AM
இந்த ஆண்டு கடைபிடிக்கப்படும் 5-வது தேசிய வாக்காளர் தின வாசகமாக, `சுலபமான பதிவு, சுலபமான திருத்தம்’ என்ற வார்த்தைகளை, இந்திய தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது.
வாக்குரிமை மற்றும் வாக்காளராகப் பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தை கடைபிடித்து வருகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையம் 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி உருவாக்கப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 25-ம் தேதி வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் தினத்துக் கான சிறப்பு வாசகம் தேர்வு செய்யப்பட்டு, அந்த வாசகத்தின்படி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த அடிப்படையில், வரும் 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினத்துக்கான வாசகமாக, `சுலபமான பதிவு, சுலப மான திருத்தம்’ என்ற வார்த்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், `நீங்கள் 18 வயது ஆனவரா? எழுவீர் வாக்காளராக, இன்றே பதிவு செய்வீர்’ என்ற வாசகமும் பிரபலப்படுத்தப்பட உள்ளன. இதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் வானவில்லின் ஏழு நிறங்களில் இளம் வாக்காளர்கள் எழுவது போன்ற நவீன ஓவியத்தை தயார் செய்துள்ளது. இளம் வாக்காளர்களின் வாக்கைக் குறிக்கும் வகையில், `உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்’ என்ற வாசகத்தைக் கொண்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேனர்களை வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சென்னையில் தமிழக ஆளுநர் ரோசய்யா தலைமையில் வாக்காளர் தின விழா நடைபெற உள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு கூடுதலாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த, மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வாக்காளர் தின வாசகம் குறித்து அதிகாரிகள் கூறும்போது, “இணையதள பதிவை பிரபலப்படுத்தும் வகையில் `சுலபமான பதிவு, சுலபமான திருத்தம்’ என்ற வாசகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதே போல் வழக்கமான வாக்காளர் திருத்த பணிகளிலும் மிகவும் எளிதான நடைமுறைக்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டங்களில் நிரந்தரமாக தேர்தல் பிரிவு செயல்படுகிறது. எனவே எப்போதும் வாக்காளர்கள் பெயரை சேர்க்கலாம், திருத்தலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்த வாக்காளர் தினத்தில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT