Published : 01 Jan 2015 03:09 PM
Last Updated : 01 Jan 2015 03:09 PM
தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள இரு உர ஆலைகளுக்கு மானிய விலையில் தொடர்ந்து நாப்தா வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், உண்மையில், தமிழகத்தின் நிதி நிலைமை முதலமைச்சர் குறிப்பிட்டதை விட பல மடங்கு மோசமாக இருப்பதை உணர முடிகிறது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில், ரூ.289 கோடி உபரி நிதி இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய் ரூ.91,835 கோடியாக இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த அரையாண்டில் மாநிலத்தின் வரி வருவாய் ரூ. 45,917.5 கோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதைவிட ரூ.8861.5 கோடி குறைவாக ரூ.37,056 கோடி மட்டுமே தமிழக அரசு வருவாய் ஈட்டியிருக்கிறது.
அதேபோல், வணிக வரி வசூல் 23.35% அதிகரிப்பதற்கு பதிலாக 1.48% மட்டுமே அதிகரித்துள்ளது. மாநில கலால் வரி வசூல் 28.75% என்ற இலக்கிற்கு பதிலாக 10.87% மட்டுமே உயர்ந்திருக்கிறது.
முத்திரை மற்றும் பதிவுத்துறை வருவாய் 28.75% அதிகரிக்க வேண்டியதற்கு பதிலாக மைனஸ் 2.49 விழுக்காடாக குறைந்திருக்கிறது.
வாகனங்கள் மீதான வரி 39.71% என்ற இலக்கில் 7 விழுக்காட்டைக் கூட எட்டவில்லை. நடப்பாண்டிற்காக நிர்ணயிக்கப்பட்ட எந்த இலக்கையுமே எட்ட்ட முடியாமல் தமிழக அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பது தான் இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மையாகும். மாநில கலால் வரி வருவாய் மட்டும் தான் ஆறுதல் தரும் வகையில் இருக்கிறது. இதற்குக் காரணம் அரசின் நிர்வாகத் திறமையில்லை; மது விற்பனை தான் என்பது இன்னொரு அவலமான உண்மை.
தமிழக அரசின் இந்த நிலை வரும் மார்ச் மாதம் வரை தொடர்ந்தால், தமிழகத்தின் வரி வருவாய் சுமார் ரூ.18,000 கோடி குறைவாக இருக்கும். இதை சமாளிக்க கடன் வாங்குவதை விட வேறு எந்த வழியும் இருக்காது. ஏற்கனவே தமிழக அரசு ரூ.1,78 லட்சம் கோடி கடன் வாங்கிக் குவித்துள்ள நிலையில், வரி வருவாய் வீழ்ச்சியை சமாளிக்க வாங்க வேண்டிய கடனையும் சேர்த்தால் தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் தொகை ரூ. 2 லட்சம் கோடியை எட்டிவிடும் ஆபத்து இருக்கிறது.
தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தப் போவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், இப்போது எவ்வளவு அதல பாதாளத்தில் தள்ளியிருக்கிறார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும். இந்த நெருக்கடியிலிருந்து தமிழ்நாட்டை ஆட்சியாளர்கள் எவ்வாறு மீட்கப் போகிறார்கள்? கடந்த இரு ஆண்டுகளாக தமிழகத்தின் வருவாய் குறைந்து, செலவுகள் அதிகரித்தது ஏன்? என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள். அது அவர்களின் உரிமையும் கூட.
எனவே, தமிழகத்தின் நிதி நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்ததற்கான காரணங்கள் என்ன? இதை சரி செய்து பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர என்னென்ன செயல்திட்டங்கள் உள்ளன என்பதை விளக்கும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT