Published : 03 Jan 2015 10:58 AM
Last Updated : 03 Jan 2015 10:58 AM
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் மீது கடந்த 31-ம் தேதியன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் முத்துப்பேட்டை அம்மாபள்ளி தர்காவை புத்தாண்டு அன்று நள்ளிரவில் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த 150 பேர் உருட்டைக்கட்டைகளோடும், கற்களோடும் சென்று தாக்கியுள்ளனர்.
இந்தப் புகழ்மிக்க தர்காவுக்கு இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் நாள்தோறும் வருகின்றனர். பலர் இரவு வேளைகளில் அந்த தர்காவின் தாழ்வாரங்களில் படுத்து உறங்குகின்றனர். இதைச் சகிக்காத பாரதிய ஜனதா கட்சியினரும், மத வெறியர்களும் 150 க்கு மேற்பட்டவர்கள் புத்தாண்டு அன்று நடுநிசியில் தர்கா வளாகத்துக்குள் நுழைந்து தாக்க ஆரம்பித்தவுடன், பயந்துபோன யாத்திரிகர்கள் தர்காவுக்குள் ஓடிச் சென்று கதவை தாழிட்டுக்கொண்டனர். இல்லையேல், பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.
உள்ளே நுழைய முடியாத வன்முறைக் குண்டர்கள் தர்காவின் சுற்றுச்சுவரை உடைத்து நொறுக்கி இருக்கிறார்கள். தர்காவின் கண்ணாடி ஜன்னல்களையும், டியூப்லைட்டுகளையும் உடைத்திருக்கிறார்கள். அருகில் இருந்த ஒரு இந்து மதத்தவர் வீட்டையும், ஒரு இஸ்லாமியர் வீட்டையும் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலிகளை நொறுக்கியிருக்கிறார்கள்.
இந்தக் கொடூரமான தாக்குதலை அறிந்து மத வித்தியாசம் இன்றி, இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட ஊர் மக்கள் அனைவரும் தர்காவை பாதுகாக்க விரைந்து வந்தவுடன், வன்முறையாளர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக ஒரு தொகுதியில் போட்டியிட்ட நபரின் ஆதரவாளர்கள்தான் இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முத்துப்பேட்டையினுடைய காவல்துறை துணை கண்காணிப்பாளரின் அணுகுமுறைதான் இந்த வன்முறை வெறியாட்டத்தை ஊக்குவித்திருக்கிறது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.
மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து, மோதல்களை உருவாக்கும் நோக்கத்தில் புத்தாண்டு அன்றே நடத்தப்பட்ட இத்தகைய அராஜக செயல்களை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில், தர்கா மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை தமிழக காவல்துறை உடனடியாகக் கைது செய்து, தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து குற்றக் கூண்டில் நிறுத்தி, தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்.
அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த முனைந்துவிட்ட தீய சக்திகளுக்கு மதிமுக சார்பில் பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்" என்கிறார் வைகோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT