Published : 02 Jan 2015 11:04 AM
Last Updated : 02 Jan 2015 11:04 AM
ராமநாதபுரம் பாரம்பரிய முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
இந்தியாவில் பொருள்களுக்கான புவிசார் குறியீடுகள் சட்டம் 1999-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு 2003-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் இந்தியாவில் தனித்தன்மை வாய்ந்த பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழிவகுக்கிறது.
ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்த, தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்படுகிறது. அந்தப் பொருளின் பிறப்பிடம், தனித்தன்மை ஆகியவற்றை அறிய, இந்த குறியீடு உதவும். இதன் மூலம், சம்பந்தப்பட்ட பொருளை, வேறு யாரும் வியாபார நோக்கத்துக்காகவோ, போலியாகவோ பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக தடுக்க முடியும்.
தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, கும்பகோணம் வெற்றிலை, மதுரை மல்லி என 20-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ‘புவிசார் குறியீடு’ கிடைத்துள்ளது. 2014-ம் ஆண்டில் 503 பொருட்களுக்கு புவிசார் குறியீட்டுக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 215 பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியது.
மிளகாய் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்
இந்தியாவிலிருந்து மிளகாய்த் தூள், காய்ந்த மிளகாய், மிளகாய் ஊறுகாய் மற்றும் மிளகாய் பசை என அமெரிக்கா, சீனா, இந்தோனேசியா, இலங்கை, நேபாளம், மெக்சிகோ, மலேசியா, வங்கதேசம், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் உலக அளவில் மிளகாய் உற்பத்தி, நுகர்வு மற்றும் ஏற்றுமதியில் இந்தியா (36%) முதல் நாடாக விளங்குகிறது.
ராமநாதபுரம் முண்டு மிளகாய்
கார்த்திகையில் விதைத்து சித்திரை, வைகாசி மாதங்களில் அறுவடை செய்யப்படும் முண்டு மிளகாய் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 19 ஆயிரத்து 280 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு மிளகாய் சாகுபடிக்கான செலவு ரூ.10,000 செய்தால் 3 மடங்கு லாபமும் கிடைக்கும். மாவட்டத்தில் நிலவும் வறட்சியை நன்கு தாக்குப்பிடித்து வளரக்கூடிய முண்டு மிளகாய் தனித்தன்மையே அதன் அதிகபட்சமான காரத்தன்மைதான். இதனால் முண்டு மிளகாய்க்கு உலகளவில் நல்ல சந்தை உள்ளது.
இதுகுறித்து இயற்கை வேளாண் பயிற்றுநர் ஏகாம்பரம் கூறியது:
உண்ண வண்ணத் தொளிநஞ்ச முண்டு என திருஞானசம்பந்தர் தேவாரம் பாடலிலேயே ராமநாதபுரம் முண்டு மிளகாய் பற்றி சிலாகித்து கூறுகிறார். மேலும் தமிழகத்தில் மிளகாய் உற்பத்தியில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
தாவரங்கள் பாரம்பரிய அறிவுசார் சட்டத்தின் கீழ் வளர்ந்த நாடுகள் பதிவு செய்துகொள்கின்றன. நமது பொன்னி அரிசியை மலேசியாவிலும் பாசுமதி அரிசியை அமெரிக்காவிலும் பதிவுசெய்து வைத்திருந்தனர். இதை எதிர்த்து இந்தியா வழக்கு தொடுத்து தனது பாரம்பரிய உரிமையை வென்றது. இல்லை யென்றால் பொன்னி மற்றும் பாசுமதி அரிசியை அதிகம் பயன்படுத்தும் இந்தியர்கள் உரிமத் தொகையாக மலேசியாவுக்கும், அமெரிக்காவுக் கும் அதிக தொகையை தர வேண்டியது இருக்கும்.
இத்தகைய வர்த்தக வரம்பு மீறல்களுக்கு எதிரான நடவடிக்கை களுக்கு சட்டப்பாதுகாப்பு அளிக்கும் வகையில் ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT