Published : 12 Jan 2015 01:40 PM
Last Updated : 12 Jan 2015 01:40 PM

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்புச் சந்தை திறப்பு

சென்னை கோயம்பேடு மார்க் கெட்டில் பொங்கல் சிறப்புச் சந்தை திறக்கப்பட்டுள்ளது.

பொங்கலையொட்டி, கோயம் பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்புச் சந்தை 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து ஆகியவை விற்பனை செய்யப்படும். நிகழாண்டு, வெள்ளிக்கிழமை தொடங்கிய பொங்கல் சிறப்புச் சந்தை, வருகிற 18-ம் தேதி வரை நடைபெறும்.

இந்தச் சந்தைக்கு கரும்பு வரத்து அதிகமாக உள்ளது. கடலூர் மற்றும் தேனி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் கரும்புகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இதுகுறித்து மார்க்கெட் நிர்வாகக் குழு உறுப்பினர் எம். தியாகராஜன் கூறியதாவது:

நிகழாண்டு பொங்கல் சிறப்புச் சந்தை அனுமதி ரூ. 7 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. இந்தச் சந்தைக்கு மதுரை மாவட்டம் மேலூர், கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, சிதம்பரம், மயிலாடுதுறை, திருக்காட்டுப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து அதிக அளவில் கரும்புகள் வரவுள்ளன என்றார் அவர்.

தேனி மாவட்டம் தேவதான பட்டியைச் சேர்ந்த கரும்பு விவசாயி சுப்பிரமணி கூறியதாவது:

கடந்த ஆண்டு தரமான கரும்பு ஒரு கட்டு (20 கரும்புகள்) ரூ. 300-க்குத் தொடங்கி பிறகு ரூ. 150 வரை விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டு தற்போது ரூ. 350 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது, பொங்கலின்போது ரூ. 250 வரை குறைய வாய்ப்புள்ளது.

போதிய மழையின்மை, குறித்த காலத்தில் மழை பெய்யாதது ஆகிய காரணங்களால் நிகழாண்டு கரும்பு விளைச்சல் மற்றும் தரம் குறைந்துள்ளதால், நான் ஒரு கட்டு கரும்பை ரூ. 200-க்கு விற்பனை செய்கிறேன். முதல் நாளில் 30 சதவீத கரும்புகளை விற்பனை செய்துள்ளேன். தற்போது விற்பனை சற்று மந்தமாக உள்ளது. ஓரிரு நாளில் சூடுபிடிக்கும். விற்பனையைப் பொருத்து கூடுதல் கரும்பு லோடுகளை வரவழைப்பேன்.

சென்னையைச் சேர்ந்த கரும்பு வியாபாரி ஆறுமுகம் கூறியதாவது:

நான் சிதம்பரத்தில் இருந்து கரும்புகளை வாங்கி வந்து விற்பனை செய்கிறேன். லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்லக் கூடாது என்பதால் ஒரு லாரியில் 250 கட்டுகள் வரை மட்டுமே கொண்டு வருகிறோம். இதற்கு முன்பு 400 கட்டுகள் வரை கொண்டு வந்தோம் என்றார் அவர்.

மார்க்கெட் நிர்வாகக் குழு அலுவலர் ஒருவர் கூறியதாவது:

சிறப்புச் சந்தைக்குள் கரும்பு ஏற்றி வரும் லாரிக்கு ரூ. 1000, மஞ்சள் ஏற்றி வரும் லாரிக்கு ரூ. 500, சாலையோரம் இறக்கி விற்பனை செய்வதற்கு ரூ. 200, சிறு கடைகள் வைக்க ரூ. 100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மீறி சிறப்புச் சந்தையின் ஒப்பந்ததாரர் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அதே பகுதியில் உள்ள மார்க்கெட் நிர்வாகக் குழு அலுவலகத்தில் வியாபாரிகள் புகார் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x