Published : 20 Jan 2015 08:02 PM
Last Updated : 20 Jan 2015 08:02 PM

ஸ்ரீரங்கத்திலிருந்து ஒகேனக்கல் விபத்து குறித்து தமிழக அமைச்சர்கள் கவனத்தை திருப்ப வேண்டும்: தமிழிசை சவுந்தர்ராஜன்

ஒகேனக்கல் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கும், கவலைக்கிடமாக இருப்பவர்களுக்கும் உடனடியாக எந்த அளவு உச்சபட்ச சிகிச்சை தேவைப்படுகிறதோ அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு உடனே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' தருமபுரியிலிருந்து ஒக்கேனக்கல் சென்ற அரசுப் பேருந்து மிகப்பெரிய விபத்திற்குள்ளாகி அதில் சிலர் உயிர் இழந்திருப்பதும் பலர் படுகாயமடைந்திருப்பதும் மற்றும் பலர் ஆபத்தான சூழ்நிலையில் இருப்தாகவும் வந்திருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி தருகிறது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே சமயம் படுகாயம் அடைந்தவர்களுக்கும், கவலைக்கிடமாக இருப்பவர்களுக்கும் உடனடியாக எந்த அளவு உச்சபட்ச சிகிச்சை தேவைப்படுகிறதோ அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு உடனே ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக விபத்தின் காரணமாக பலர் காயப்பட்டிருப்பதால் இரத்தம் அதிகமாகத் தேவைப்படும். அதனால் இரத்தம் தேவையினால் யாரும் உயிர் இழந்து விடக்கூடாது என்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும். எனவே அனைத்து வகை இரத்தங்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு போன்றவைகளுக்கு சேவை செய்ய, சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழுவை ஏற்பாடு செய்து தருமபுரி, சேலம் மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.

தருமபுரி, சேலம் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத பட்சத்தில், சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு உயிருக்கு பாதகமில்லாமல், அதிக வசதியுடன் கூடிய உயர் சிகிச்சை மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தங்கள் உற்றார் உறவினர்களைப் பற்றிய விபரம் தெரியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தாருக்கு அவர்ளை ஆசுவாசப்படுத்தி, பதட்டமில்லாமல் இருக்கும் வகையில் அவர்களுக்குத் தேவையான தகவல்களை தெரிவிப்பதற்கான தகவல் மையங்கள், தொலைபேசி எண்கள் அமைத்து உதவிடல் அவசியம்.

தமிழக அமைச்சர்கள் ஸ்ரீரங்கத்திலிருந்து தங்கள் கவனத்தை சற்றே திருப்பி, இன்று அரசுப் பேருந்து விபத்தில் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் ஏழை எளிய மக்களை காப்பாற்றுவதிலும், உரிய சிகிச்சைகளை காலம் தாழ்த்தாமல் அளிப்பதிலும் தேவையான போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்'' என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x