Published : 07 Jan 2015 04:57 PM
Last Updated : 07 Jan 2015 04:57 PM
'இந்து மதத்தை பாதுகாக்க ஒவ்வொரு இந்து தாய்மாரும் நான்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்' என்ற பாஜக எம்.பி. சாக்ஷியின் பேச்சுக்கு பிரதமர் மோடியின் பதில் என்ன என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் வரலாறு காணாத வளர்ச்சி ஏற்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி வாக்குறுதி கொடுத்ததை எவரும் மறந்திருக்க முடியாது. ஆனால், கடந்த நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டதில் பெருமளவு குறைக்கப்பட்டு வருவது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
100 நாள் வேலைத் திட்டம்
குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டரூ.34,000 கோடியில், ரூ.23,000 கோடிதான் செலவழிக்கப்பட்டுள்ளது. மீதி 11,000 கோடி ரூபாய் வேறு பணிகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது .
அதேபோல் கல்விக்கு ஒதுக்கப்பட்டதில் 11, 000 கோடி ரூபாயும், சுகாதாரத் துறையில் 7, 000 கோடி ரூபாயும், ஊரக வளர்ச்சித் துறையில் 10, 000 கோடியும் நிதிவெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டு வருகிறது. இத்தொகை சீர்கெட்ட நிலையில் உள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பா.ஜ.க. அரசு நடத்திய ஆய்வின் அடிப்படையில் நாடு முழுவதும் 200 மாவட்டங்கள்தான் பின்தங்கிய நிலையில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது, இதில் தமிழகத்திலுள்ள 385 வட்டாரங்களில் 98 வட்டாரங்கள் தான் பின்தங்கிய நிலையில் இருப்பதாக அந்த ஆய்வில்கூறப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம்நிறைவேற்றப்படும் என்கிற செய்தி கிராமப்புற பொருளாதாரத்தையே சீரழிக்கிற செயலாகும்.
கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குகிற வகையில் 2006 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டத்தின் காரணமாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்படுத்தியதை எவரும் மறுக்க முடியாது.
இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் சராசரியாக 5 கோடி குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்க காரணமாக வாங்கும் சக்தி உயர்ந்து பெண்கள் சுய சார்புதன்மையோடு வாழ்வதற்கு அடித்தளம் அமைக்கப்பட்ட து.
இத்திட்டத்தினால் ஏற்பட்ட நற்பலன்களை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. அரசுஇத்திட்டத்தை முடக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறது. இதைநாட்டு மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். இத்திட்டம் முடக்கப்பட்டால் நாடு முழுவதும்பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
மதவாத பிரச்சினை
அதேபோல, மத உணர்வுகளை புண்படுத்துகிற வகையில் தொடர்ந்து பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் பேசி வருவது மிகுந்த வேதனையைத் தருகிறது.
ஏற்கெனவே சர்ச்சையை உருவாக்கிய பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ் நேற்று பேசும் போது 'இந்து மதத்தை பாதுகாக்க ஒவ்வொரு இந்து தாய்மாரும் நான்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். மதமாற்றத்தை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். ஆனால் இது மறுமதமாற்றம் செய்பவர்களுக்கு பொருந்தாது.
விரைவில் பசுவதை தடுப்பு சட்டம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, மதமாற்ற தடைச் சட்டம் ஆகியவற்றை விரைவில் நிறைவேற்றுவோம்’ என்று ஆணவத்தோடு பேசியிருப்பதைவிட மதநல்லிணக்கத்தை குழிதோண்டி புதைக்க முயலும் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.
இவரது கருத்து குறித்து பிரதமர் நரேநத்திர மோடியின் கருத்து என்ன? இதை ஏற்கிறாரா? மறுக்கிறாரா? ஒரு பக்கம் பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுகிற அரசியலை நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள்.
ஒருபக்கம் வளர்ச்சியைப் பற்றி பேசுவது, மறுபக்கம் மத அடிப்படையில் மக்களைத் திரட்டுவது என்பதுதான் நரேந்திர மோடி அரசின் தந்திர திட்டமாக இருந்தால் அதை மத சார்பற்ற சக்திகள் முறியடித்துக் காட்டுவார்கள்'' என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT